தஞ்சாவூர்: எடப்பாடி பழனிசாமி என்ன புழுவா? மீன் தின்பதற்கு என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தனது பிரச்சார பயணத்தில் திருவிடை மருதூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார், கும்பகோணம் சட்டசபை தொகுதியில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பேசியதாவது: விவசாயிகளும், நெசவாளர்களும் சிறப்பாக வாழ்ந்தது அ.தி.மு.க., ஆட்சியில் தான். விவசாயிகள் பாதிக்கப்படும் போது ஒடோடி வந்து உதவிய ஆட்சி அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
நெசவாளர்கள் விற்பனைக்கு 300 கோடி மானியம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அதிக அளவில் துணி உற்பத்தியாகி விற்காமல் உள்ளது. மானியம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களுக்கு பசுமை வீடு கட்டிக்கொடுக்கப்படும். மானியம் மற்றும் தள்ளுபடி வழங்கப்படும்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க., வின் சாதனை. மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப்பில் கூட அரசியல் செய்த அரசு இந்த தி.மு.க., அரசு. அ.தி.மு.க., ஆட்சி தான் மக்களுக்கான ஆட்சி.
பழனிசாமிக்கு படிப்பு கசக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். படிப்பு இனித்தது. இதனால் தான் 17 மருத்துவக்கல்லுாரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கள், 21 பாலிடெக்னிக், 4 இன்ஜினியரிங், 5 வேளாண் மற்றும் 5 கால்நடை மருத்துவக்கல்லுாரி திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எத்தனை கல்லுாரிகளை திறந்தார்.
விவசாயிகள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என எல்லோம் இந்த ஆட்சியில் போராடுகிறார்கள். தமிழகம் போராட்ட களமாக தி.மு.க. ஆட்சியில் மாறி விட்டது. பொங்கல் தொகுப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் அது விசாரிக்கப்படும்.
அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கி விடும் என ஸ்டாலின் கூறுகிறார். பழனிசாமி என்ன புழுவா மீன் தின்பதற்கு. கூட்டணியை கட்சிகளை ஸ்டாலின்தான் விழுங்கிக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி கண்ணுக்கு தெரியவில்லை. வி.சி.க., ஏதோ காரணம் சொல்லி ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற மக்களே சாட்சி. எனக்கு பல கஷ்டங்களை தந்தார்கள். விவசாயி முதல்வராகி விட்டார். நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதும், ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு நின்றார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சரித்திர வெற்றி பெறும். அப்போது ஸ்டாலினுக்கு சட்டை மட்டும் அல்ல வேஷ்டியும் காணாமல் போகி விடும். ஸ்டாலின் பொம்மை முதல்வர்.
இந்தியாவில் அதிக அளவில் கடன் வாங்கியதில் சூப்பர் முதல்வர் ஸ்டாலின். நான்கு ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த ஆட்சியில் குற்றம் செய்கிறாரவர்களுக்கு குற்ற உணர்வு இல்லாமல் போய் விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.