தஞ்சாவூர்: ஐ.நா. அமைப்பின் மாணவர் கல்விப் பயணத் திட்டத்தின் கீழ் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றம் 5.O-வில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் மாணவி தரணிஸ்ரீக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே புதிய பேருந்து நிலையம் அருகில் வசிப்பவர் சு.மாதவன். இவர் தஞ்சாவூர் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா. இவர்களின் மகள் தரணி ஸ்ரீ, இவர் தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தரணி ஸ்ரீ சிறுவயது முதல் பல்வேறு மன்றங்கள் நடத்திய பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
பேச்சுப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் வெற்றிப் பெற்ற தரணி ஸ்ரீ, கராத்தே, செஸ் போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஆங்கில வழி பேச்சுப்போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஐ.நா. அமைப்பின் மாணவர் கல்விப் பயணத் திட்டத்தின் கீழ் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றம் 5.O-வில்தமிழ்நாடு சார்பில் பங்கேற்க அரசு பள்ளிகளில் பயிலும் 3 மாணவர்கள், 3 மாணவிகள் என 6 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்த ஆறு பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி தரணி ஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை திறனாய்வு கூட்டத்தின் போது பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி மற்றும் மாணவி தரணி ஸ்ரீயை அழைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார். மேலும் மாணவி தரணிஸ்ரீக்கு பொன்னாடை அணிவித்தார்.
மாணவி தரணிஸ்ரீயின் தந்தை மாதவன் பள்ளி துணை ஆய்வாளராக பணியாற்றுகிறார். அவர் தன் மகளை தனியார் பள்ளியில் சேர்க்காமல் அரசு பள்ளியில் சேர்த்துள்ளதும் பாராட்டுக்களை பெற்றது. வாழ்வில் முன்னேற்றத்தின் படிக்கட்டுகளாக இருப்பவை முயற்சி, செயல்திறன், தன்னம்பிக்கைதான். முன்னேற முயற்சியை, உழைப்பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புபவர்கள் வெற்றியின் பக்கம் நிற்கின்றனர். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது என்பதையும் தெரிந்து உள்ளனர்.
அறிவுக்கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும். துன்பங்களையும், தோல்விகளையும் மனோபலத்துடன் எதிர்கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான். வெற்றியாளராக மாறுவான் என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
வெற்றியின் அடிகோலாக இருப்பது தன்னம்பிக்கை. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். பல்வேறு பட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும். ஆனால் இவற்றை எல்லாம் தகர்த்து தன்னம்பிக்கை கொண்டு செயல்பட்டால் மாணவி தரணிஸ்ரீ போல் உச்சத்தை எட்டலாம் என்பது நிதர்சனமான உண்மை.