தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் 6,837 பேருக்கு ரூ.19.60 கோடியில் நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்

Continues below advertisement

தஞ்சாவூரில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 6,837 பேருக்கு ரூ.19.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சென்னையில்  காணொலிக் காட்சி வாயிலாக டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர்  அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டிகேஜி.நீலமேகம், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, பேராவூரணி என்.அசோக்குமார், மாநகராட்சி மேயர்கள் தஞ்சாவூர் சண்.ராமநாதன், கும்பகோணம் க.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ராஜாராம், தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Continues below advertisement

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 3,502 பேருக்கு ரூ.7 கோடி  மதிப்பீட்டில் நலிவுற்றோர் நிதி உதவித்தொகையும், 84 பேருக்கு ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவித் தொகை உள்பட மொத்தம் 6,837 பேருக்கு ரூ.19.60 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி.செழியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உதவி ஆட்சியர் (பயிற்சி)எம்.கார்த்திக்ராஜா, மாவட்ட திட்ட இயக்குநர் பெ.க.அருண்மொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இதில், தமிழக முதல்வர் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி  வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தாட்கோ மூலம் ரூ.42.80 லட்சம் மதிப்பீட்டில் அதிராம்பட்டினம் அரசு தொடக்கப்பள்ளி, ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வளப்பக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறை, கழிவறைக் கூடம், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி போன்றவற்றை தொடக்கி வைத்தார்.

மேலும் ரூ.77.89 லட்சம் மதிப்பீட்டில், தாமரங்கோட்டை கிராம அறிவுசார் மையம் என மொத்தம் ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை தொடங்கி வைத்தார். சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிக்கான விருதினை தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் ஊராட்சி மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடிக்கான காசோலையினை வழங்கினார்.