தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின்  மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் முழுவதுமாக மூட தமிழக அரசு  உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்தில் இந்துக்கள் திருமணம் உள்ளிட்ட சில நற்காரியங்களை செய்யமாட்டார்கள் என்பதால் கடந்த ஒரு மாதகாலமாக திருமணங்கள் எதும் நடைபெற்ற வில்லை இந்த சூழலில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கியது, இதனையடுத்து ஆவணி முதல் முகூர்த்த தினமான  வெள்ளிக்கிழமையான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நடைபெறுவதாக இருந்த திருமணங்கள் கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் கோயில்  வாசலிலேயே திருமணங்கள் நடைபெற்றன. 




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி உடனாகிய தையல்நாயகி அம்பாள்  ஆலயத்தில் திருமணம் நடத்தினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் அங்கு அதிகளவு ஆவணி மாதங்களில் திருமணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று இங்கு  திருமணம் நடத்த முடிவு செய்தவர்கள் கோயில் மூடப்பட்டு அனுமதி மறுத்ததை அடுத்து கோபுர வாசலில் நின்று புதுமண தம்பதியினர் உறவினர்கள் சூழ, வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க மங்கல வாத்தியங்கள் முழங்க மாலை மாற்றி தாலி கட்டிக் கொண்டனர். பின்பு திருமண மண்டபங்களுக்கு சென்று தங்களது சம்பிர்தாய நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


இந்நிலையில் கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையானது அதிகரிக்க தொடங்கி மாவட்டத்தில் கொரனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிகிச்சை பலனின்றி 274 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்றாம் அலை பரவாத வண்ணம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.




 


இதுபோன்ற வேலையில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி மக்கள் கூடி வருவதை காண முடிவதாகவும் இதனால் வைரஸ் தொற்று மீண்டும் மாவட்டத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற சுபநிகழ்ச்சிகளை கண்காணிக்க தனி அதிகாரிகளை நியமித்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.