தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, எந்த ஒரு காவல்துறை அதிகாரியாவது அத்துமீறினால், அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், பா.ஜ., மற்றும் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்க மாட்டோம். நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.
10 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், மடத்துத்தெருவில், இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 10 அடி உயரத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருத்தினராக பா.ஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துக்கொண்டார். விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி, நடிகை கஸ்துாரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பழநியில் நடந்தது ஆன்மிக மாநாடு இல்லை
பின்னர் ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நுாறு சதவீத இந்து விரோத தீய அரசாங்கம் நடக்கிறது. சனாதான தர்மம் என்றால் அது இந்து மதம் தான் என உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது. பழநியில் நடந்தது ஆன்மிக மாநாடு இல்லை என அமைச்சர் உதயநிதி பேசினார். அந்த மாநாடு இந்து விரோத மாநாடு தான். முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அரசு பணத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா
தமிழக முதல்வர் .ஸ்டாலின் அரசு பணத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, எந்த ஒரு காவல்துறை அதிகாரியாவது அத்துமீறினால், அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், பா.ஜ., மற்றும் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்க மாட்டோம். நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். சனாதன இந்து மதத்திற்கு எதிரி அமைச்சர் உதயநிதி. அவர் மீது அனைத்து மாநிலங்களிலும் வழக்கு உள்ளது. மூத்த அமைச்சர்கள் எல்லாம் இந்த இந்து விரோத உதயநிதியின் அடிமைகள்.
பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
தமிழகத்தில் மொழி கொள்கை தொடர்பாக படிக்கின்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும். கிராவல் மண் கொள்ளையடித்த வழக்கில் உள்ள ஊழல் பேர்வழி அமைச்சர் பொன்முடி மொழிகளைப் பற்றி முடிவு எடுப்பதற்கு யார்?. பொன்முடிக்கு முதுகெலும்பு இருந்தால் வேளச்சேரியில், இந்தியும், சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கும், முதல்வர் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூட முடியுமா?. முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வி இல்லை. அப்படி என்றால், நீங்களே, கருணாநிதியை, மதிக்கவில்லை என்று அர்த்தம்.
சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள்
மொழிக்கொள்கையில் பிடிவாதம் பிடித்தால், திமுக எம்பி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் அனைத்து சி.பி.எஸ்.சி. பள்ளி வாசலிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம். முதலில் அதை எல்லாம் சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள். மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்க வேண்டும். ஒரு மொழியை படிக்க கூடாது என தடுப்பது ஒரு திணிப்புதான். இவ்வாறு அவர் கூறினார்.