தஞ்சாவூர்: தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ரயில் இன்ஜின் பழுதால் நீண்டநேரம் நின்றது. இதனால் தண்டவாளத்தில் பயணிகள் நடந்து சென்றனர்.


தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் கோயில்கள் அதிகம் உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, பள்ளியக்ரஹாரம் பெருமாள் கோயில்கள், திட்டை கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், சரஸ்வதி மகால் நூலகம் என்று அமைந்துள்ளது. இதேபோல் கும்பகோணத்தில் காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்டா விஸ்வநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், பெருமாள் கோயில்கள் என்று ஏராளமான கோயில்கள் கும்பகோணம் நகர் பகுதியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளது. இதேபோல் மயிலாடுதுறையிலும் ஏராளமான கோயில்கள் உள்ளன. 


இதனால் வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் இந்த பகுதிகளுக்கு சாலை மார்க்கமாகவும், ரயில்கள் மூலமும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் தஞ்சையிலிருந்தும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தும் தினமும் கும்பகோணம், மயிலாடுதுறைக்கு வேலைக்கு செல்பவர்களும் அதிகம் உள்ளனர். தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும்.


தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 2-12-1861-ம் ஆண்டு தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. திருச்சி-நாகை வழித்தடம், ஆங்கிலேயர்களின் வாணிப போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழித்தடம் அகல ரெயில்பாதையாக இருந்தது. பின்னர் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டு, தற்போது மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டது.


சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை இருந்தது. இந்த வழித்தடம் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.


தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும், 7 ரெயில்வே பாதைகளும் உள்ளன. நாள்தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையம் முதன்மையாக விளங்கி வருகிறது. இப்படி பொதுமக்கள் மத்தியில் ரயில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 


இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் ( வண்டி எண்.16833) இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு சற்று முன்பாக சாந்த பிள்ளைகேட் என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென இன்ஜின் கேபிள் பழுதானால் பாதி வழியிலேயே நின்றது. 


இதனால் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் செய்வதறியாது தவித்தனர். வெகுநேரம் நின்றதால் தஞ்சையில் இறங்க வேண்டிய பயணிகள்  தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர். இதற்கிடையே  ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இன்ஜின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 


சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பழுது சரி பார்க்கும் பணி நடந்தது. பழுதான என்ஜின் அகற்றப்பட்டு மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ரயிலில் பொருத்தப்பட்டது. பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.