தஞ்சாவூர்: தி.மு.க. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டு பயந்துவிட்டது. இருப்பினும் நாம் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்க இரவு பகல் பாராது கடுமையாக உழைக்க வேண்டும் என்று தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.
தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணிய மூர்த்தி, மனோகரன் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் காமராஜ், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும். அதற்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதியை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும். ஒவ்வொரு முகவர்களும் அதிக வாக்குகளை பெற்று தர கடுமையாக உழைக்க வேண்டும்.
தி.மு.க. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டு பயந்துவிட்டது. இருப்பினும் தி.மு.க.வை எளிதாக எண்ணி விடாமல் நாம் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. எனவே ஒரு மாத காலம் நமக்கு முக்கியமான காலம். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் அவருக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் 18 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கிறது. இதற்கு ஒவ்வொரு அ.தி.மு.க. உண்மையான தொண்டனும் கடுமையாக உழைத்து உள்ளீர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். விவசாயிகளை காப்பாற்ற முடியும். அவர் மீண்டும் முதல்வர் ஆவார் நீங்கள் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். டெல்டா பகுதியில் மழையினால் நெல் மணிகள் முளைத்து விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்த போது எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து பார்த்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஒரு நாள் டெல்டாபகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்ததற்கே திமுகவினர் ஆடிப் போய்விட்டனர். உடனடியாக நெல்மணிகளை கொள்முதல் செய்தனர். இதனைப் பார்த்த விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை திருஞானம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் துரைவீரணன், விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், துணைச் செயலாளர் வெண்ணிலா பாலைரவி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், பொதுக்குமு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.