தஞ்சாவூர்: நாங்கள் எல்கேஜிதான். அவர்கள் பிஹெச்டிதான். அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ரொம்ப மகிழ்ச்சி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.


விசிக தலைவர் திருமாவளவன் திருச்சிக்கு விமானத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சைக்கு வந்த அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மது ஒழிப்பில் பாமக பி.ஹெச்.டி முடித்துள்ளது. திருமாவளவன் இப்போதுதான் எல்கேஜி வந்துள்ளார் என்று அன்புமணி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு ”அதனால் ஒன்றுமில்லை. நாங்கள் எல்கேஜிதான். அவர்கள் பிஹெச்டிதான். அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ரொம்ப மகிழ்ச்சி” என்று பட்டென்று பதில் தெரிவித்தார்.


தொடர்ந்து விசிகவின் மது ஒழிப்பு மாநாடால் கூட்டணியில் பிளவா என்று கேட்கப்பட்டதற்கு ”நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் பிரச்சினை இல்லை. இது அனைவருக்குமான பிரச்சினை. அனைவரும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தோம். பங்கேற்பதும், பங்கேற்றகாததும் அவரவர் விருப்பம்” என்றார். 


மேலும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிக எங்களைதான் முதலில் அழைத்து இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளரே என்ற கேள்விக்கு ”அது நிறைய கசப்பான அனுபவங்கள். சேர்ந்து செயல்பட முடியாத நிலைக்கு அவர்கள்தான் எங்களை தள்ளிவிட்டனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதற்கு வாய்ப்பில்லாத சூழல். பாமகவை இழிவுப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை” என்றார். 




மேலும் அவர் கூறுகையில்,  ”மதுவிலக்கு மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். எங்கள் நோக்கத்தில் எவ்வித கலங்கமும் இல்லை. கலங்கம் கற்பிக்க பலரும் நினைக்கிறார்கள். அதை பொருட்படுத்த நாங்க விரும்பவில்லை. 


மதுவிலக்கு மாநாட்டிற்காக அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் முன்னணி தலைவருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். மதுக்கடைகளுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புவார்கள். மதுக்கடைகள் இருக்கட்டும் என்று எந்த கட்சியும் சொல்ல வாய்ப்பில்லை. மதுபானத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது . அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்கும் போது ஏன் சேர்ந்து குரல் கொடுத்த கூடாது? அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மது கடைகளை மூட முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


முன்னதாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த அடிப்படையில் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை.


மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது, திருமாவளவன் தற்போதுதான் எல்.கே.ஜி வந்துள்ளார். திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பாமக-வை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுப்பது போல்தான் விசிக தலைவர் திருமாவளவன் தஞ்சையில் தெரிவித்தார்.