கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி கோயிலிலுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். இந்தியாவிலேயே சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார். வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயில், மகாமகத்திருவிழாவின் போது முதன்மையானதாகும். இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் இரவு காவல் பணியில், பகல் வாட்ச்மேன் சேகரின் மகன் சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அலுவல் பணிக்காக கோவில் அதிகாரிகள், திடிரென ஆய்வு செய்த போது,அக்கோவிலில் இரவு வாட்சுமேன்களான சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகியோர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கோவில் சன்னதி மற்றும் கருவறை அருகே உள்ள உண்டியல்களில் நூதன முறையில் பணத்தை திருடும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர.அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் கோவிலிலுள்ள இரவு நேர சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில் கடந்த மாதம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் அதேபோல் உண்டியலில் இருவரும் பணத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகிய இருவரும் இரவு நேரத்தில், அதிகாரிகள் கோவிலை பூட்டி சாவியை கொடுத்து விட்டு, சென்ற பிறகு கோவிலை திறந்து கோவில் கருவறை மற்றும் சன்னதி பகுதிகளிலுள்ள உண்டியல்களில் பக்தர்கள் பணம் செலுத்தும் துவாரம் வழியாக செல்போன் கேமரா மூலம் ப்ளாஷ் லைட் அடித்தபடி உண்டியல் பணம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை அறிந்து அதன் அளவு நீல கம்பியை எடுத்து அதில் சுவிங்கத்தை ஒட்ட வைத்து உண்டியலுக்குள் விட்டு ரூ100, 200 மற்றும் 500 நோட்டுக்களாக பார்த்து பார்த்து நூதன முறையில் திருடியுள்ளனர். இரவு நேர செலவிற்காக பணம் தேவைப்படும் போது, திருடி வந்தது தெரிய வந்தது.இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகேசன் கோவில் உண்டியலில் பணத்தை திருடிய சக்கரராஜா மற்றும் தினகரன் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார். கோயில் அதிகாரிகளிடம், உண்டியலில் ரூ. 100, ரூ.200 பணத்தை திருடியதற்கு எல்லாம் கேஸ் போட முடியாது, அதிகமான தொகை திருடியிருந்தால் மட்டும் தான் கேஸ் போட முடியும் என்று பதில் தெரிவித்துள்ளனர். இதனால் கோயில் அதிகாரிகள், உலக புகழ்பெற்ற பெருமாள் கோயிலில், உண்டியலில் திருடியதை சிசிடிவி காட்சியுடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது என கோயில் அதிகாரிகள் புலம்புகின்றனர்.குட்டிபுலி எனும் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் இதேபோல் கோவில் உண்டியலில் குச்சியில் சுவிங்கத்தை ஒட்டி பணத்தை நூதன முறையில் திருடும் காட்சி அமைந்திருக்கும். தற்போது அதே முறையை பயன்படுத்தி கும்பகோணம் கோவிலில் காவல் பணியில் ஈடுபட்ட நபர்கள் பணத்தை திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.