தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரையிலான தேசிய நெடுஞ்சாலை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா ஆகிய ஆன்மீக தலங்கள் செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு தினசரி வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகளில் இரு வழி சாலை வசதி கூட இல்லாத நிலையில் தஞ்சாவூர்-நாகை சாலை அமைந்துள்ளது. மிக குறுகிய சாலையாக இருப்பதால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது. மேலும் கோவில்வெண்ணியில் இருந்து திருவாரூர் வரையில் 5 ரெயில்வே கேட்டுகள் அமைந்துள்ளது. இங்கு உரிய மேம்பாலம் வசதி இல்லாததால் அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்டினால் போக்குவரத்து ஸ்தம்பதும், பயணிகள் அவதியடைவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 



 

கடந்த பல ஆண்டுகள் முன்பு திருச்சியில் இருந்து தஞ்சை வரையிலான 4 வழிச்சாலை பணிகள் தொடங்கிய போது நாகை வரையில் நீட்டிப்பு செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. ஆனால் திருவாரூர் உள்பட பல பகுதிகளில் சாலையோர கடைகள், வீடுகள் இடிபடுவதால், இதற்கு எதிர்ப்பு போன்ற பல காரணங்களால் தஞ்சை-நாகை 4 வழிச்சாலை பணிகள் ஒத்திவைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனால் திருச்சி-தஞ்சை 4 வழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தஞ்சை- திருவாரூர்- நாகை சாலை 4 வழிச்சாலை என்பதை மாற்றி இருவழி சாலையாக அமைத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதன்படி தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரையில் 79 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை அமைத்திட  396 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2014 ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் விடப்பட்டு, பணிக்கான ஒப்பந்தத்தை ஆந்திராவை சேர்ந்த மதுகான் என்கிற தனியார் நிறுவனம் பெற்றது. இதனையடுத்து சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. 

 

கோவில்வெண்ணியில் இருந்து கொரடாச்சேரி வரையில் உள்ள பாதையில் ரெயில்வே கேட் 5 இடங்களில் உள்ளது. இதனால் கோவில்வெண்ணியில் இருந்து கொரடாச்சேரி ஊர்குடி வரையில் புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. தஞ்சை-நாகை சாலை பணிகள் தொடக்கத்தில் வேகமாக நடைபெற்ற பணிகள் காலம் கடக்க ஆமை வேகத்திற்கு சென்றது. பணிகள் தொடங்கி 6 ஆண்டுகள் கடந்த நிலையில் 2017 ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. ஆனால் 79 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகளில் சுமார் 30 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் 50 சதவீதம் சாலை பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சாலை பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. சாலை அமைப்பதற்கான எந்திரங்கள் அனைத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தஞ்சை-திருவாரூர் இருவழிச்சாலை பணிகளால் நடைபெறுவதால் சாலையை செப்பனிடப்படாமல் குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. தினசரி வாகன விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தினால் சாலை பள்ளங்களில் பேட்ஜ் வேலைகள் நடைபெற்றது. அதுவும் முழுமையாக நடைபெறாதால் கப்பிகள் பெயர்த்து மீண்டும் பள்ளங்களாக காட்சியளிக்கின்றது.



மழைக்காலம் என்பதால் அதிக விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்கள் செல்வதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் அரசு பஸ்கள் எரிபொருள் மட்டுமின்றி பட்டை உடைவதுடன் உதிரி பாகங்கள் சேதமடைதுடன், டயர்கள் தேய்மானமாவதால் அரசிற்கு வருவாய் இழிப்பு ஏற்படுகிறது. இதனை அரசு கவலை கொள்ளமால் இருப்பது வேதனை அளிக்கிறது. பேருந்தின் பயண நேரம் அதிகரிப்பதால் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சாலை செல்வதற்கு அச்சமடைகின்ற கார் வேன் வாகன ஒட்டுநர்கள் திருவாரூரில் இருந்து மன்னார்குடி வழியாக சுற்றி கொண்டு செல்வதால் எரிபொருள் செலவு அதிகரிக்கிறது. சாலை பணிகளை விரைந்து முடித்து விபத்துகளை தவிர்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.