விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்; மக்களின் அச்சத்தை போக்க மயிலாடுதுறையில் காவல்துறையில் அணிவகுப்பு

மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொதுமக்களுக்கு  அச்ச உணர்வை போக்கும் வகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு சென்றனர். 

Continues below advertisement

விநாயக சதுர்த்தி என்ற  மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள்.

Continues below advertisement


இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார்.


இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18 -ந் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் சில நாட்களே  இருப்பதால் பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான  பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளும், அதன் தொடர்ச்சியாக விற்பனையும் களை கட்டி நடைபெற்று வருகிறது.  பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்படுவார்கள். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை  வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

Vinayagar Chaturthi 2023: கரூரில் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தை பூட்டி சீல் வைத்ததால் பரபரப்பு

இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஒரு சில பகுதிகளில் எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்களும், கலவரங்களும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தியின் போது அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு பெரும் முக்கியத்துவம் அளித்து ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பிரச்சனை ஏற்படாத வண்ணம் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக பதட்டம் நிறைந்த பகுதியாக கருதப்படும் இடங்களில் கூடுதல் காவல் துறையினரை பாதுகாப்பின் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் மட்டும் 47 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித அசம்பாவிதங்கள் இன்றியும், அச்சமின்றி மக்கள் கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை காவல்துறையினர் சார்பில் மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி, சங்கரன்பந்தல் பகுதிகளில்  கொடி அணிவகுப்பு நடத்தினர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் தொடங்கிய போலீசார் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி சஞ்ஜீவ்குமார், காவல் ஆய்வாளர் செல்வம் உட்பட ஏராளமான போலீசார் பேரணியாக காந்திஜிரோடு, பட்டமங்கலத்தெரு, பழைய ஸ்டேட்பாங்க் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வழியாக சென்று அணிவகுப்பு தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

Continues below advertisement