சீர்காழி தாலுக்கா சுற்றுவட்டார பகுதியில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடலோர கிராமங்களில் வெளியாட்கள் வருவதற்கு தடைவிதித்து, கிராம சாலைகளை மூடி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் கடலோர கிராம மக்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை கண்டு மக்கள் அஞ்சிய நிலையில், தற்போதைய இராண்டாவது அலையில் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது இப்பகுதி பொதுமக்கள் இடையை மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 20,505 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 241-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்நாள் வரை 16 ஆயிரத்து 783 பேர் குணமாகி விடு திரும்பியுள்ளனர். 3,483 பேர் தற்போது மயிலாடுதுறை, சீர்காழி, நாகை, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையம், வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு பலி எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது.
இந்நிலையில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சூழலில், கிராம பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுகின்றனர். தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு சீர்காழி நகர் பகுதியை மட்டுமே சார்ந்துள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நகர் பகுதிக்கு வந்து செல்வதை நிறுத்தியுள்ளனர். சீர்காழியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களான தொடுவாய், கூழையார், பழையார், மடவமேடு, கொட்டாய் மேடு, வேட்டங்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்கள் மற்றும் உள்கிராமங்களை சேர்ந்த மக்கள் தாங்களே முழுமையாக தங்கள் கிராமத்தை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
கிராமங்களுக்குள் நுழையும் பிரதான சாலைகளில் உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு சோதனை சாவடி அமைப்பை ஏற்படுத்தியும், தங்கள் கிராமத்தில் வெளிநபர்கள் அனுமதியில்லை என அறிப்பு பதாகைகள் வைத்தும், கிராம சாலைகளை தடுப்புகளால் மூடியும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள நகர் பகுதியிலேயே மக்கள் அலட்சியமாக சுற்றித்திரியும் இந்த வேளையில் தாங்களாகவே கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் உள்கிராம மக்களில் சுயகட்டுப்பாடு மற்றவர்களுக்கு பேரிடர் காலத்தில் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது