திருவாரூரில் சாலையோர பனை மரங்களில் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


எந்தவித உரங்களை பயன்படுத்தாமல், எவ்வித பரமாரிப்பு இன்றி இயற்கையாக வளர்க்கின்ற பனை மரங்கள் பல வழிகளிலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. பனைமரத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய மரத்தை கொண்டு வீட்டின் முக்கிய பாகமாக கருதப்படும் உத்திரம், சாரம் போன்றவை செய்யலாம். பனை மட்டை மூலம் விசிறி, பனை ஓலைகள் மூலம் வீட்டின் கூறைகள், சுண்ணாம்பு, கால்சியத்துடன் புரோட்டின் சத்தும் நிறைந்த பனை நுங்கு மேலும் பனைவெல்லம் பனங்கற்கண்டு போன்றவைகளை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாது என்பது போன்ற மருத்துவ கூற்றுகள் படி பல வழிகளில் பனை மரங்கள் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
திருவாரூர் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரையிலும், விளமல் கல்பாலம் முதல் ஆயுதப்படை மைதானம் வரை சாலை இரு புறங்களிலும் பனை மரங்கள் வளர்ந்து நிமிர்ந்து நிற்பது பார்ப்பதற்கே தனி அழகானது.




இந்நிலையில் திருவாரூர் விளமல் மன்னார்குடி சாலையில் உள்ள பனை மரங்களை சில சமூக விரோதிகள் ஆசிட் வைத்து அழித்து வருகின்றனர். இதனால் இந்த பனை மரங்கள் முற்றிலும் சேதமடைந்து வருகிறது.
மரங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தும், அதனை வளர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
நெடுஞ்சாலைகளில் எந்த காலத்திலோ வைத்த பனை மரங்கள் இன்றும் நமக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. கோடை காலத்தில் பனை நுங்கினை ஆசைப்பட்டு வாங்கி சாப்பிடும் நாம், அந்த பனை மரத்தினை வளர்க்கவோ, புதிதாக நடுவதற்கோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை.


குறிப்பாக பனை மரத்தின் வேர் மிக ஆழமாகச் செல்லக்கூடியது எப்படிப்பட்ட புயலையும் தாங்கும் வலுவை இயற்கை பனை மரங்களுக்கு தந்துள்ளது  அதுமட்டுமன்றி பனைமரங்கள் ஆறுகளின் கரைகளிலும் குளம் ஏரி போன்ற நீர்நிலைகளில் கரைகளிலும் வயல்வெளிகளில் உள்ள வரப்புகளின் கரைகளிலும் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகளை உடையாமல் பாதுகாத்து நிற்பது இந்த பனைமரங்களே. இந்த சுழ்நிலையில் திருவாரூரில் சாலையோரங்களில் இருந்த பனைமரங்கள் ஆசிட் ஊற்றி அழிப்பது வேதனைக்குரியது. மரங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும். எனவே இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய, மாநில சாலைகளில் உள்ள பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக பனை மரங்கள் அழிக்கப்படுகின்றன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அது மட்டுமின்றி வேறு ஏதேனும் சதிச் செயல் பின்னணியில் இருக்கிறதா என்பதையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.