தமிழ்நாட்டிற்கு என ஒரு மத்திய பல்கலைக்கழகம் வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்த நிலையில், கடைமடைப் பாசனப் பகுதியாகும், பின் தங்கிய மாவட்டமாகவும் விளங்கும் திருவாரூரில் இந்த மத்திய பல்கலைக்கழகம் அமையும் என அறிவிப்பு வெளியானது. திருவாரூரில் அமையும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நிலம் எடுத்து தர வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இருந்ததால் பெருமளவில் நில தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நிலத்தை கையகப்படுத்த தீவிர முயற்சியில் கடந்த 2008ஆம் ஆண்டு இறங்கினர்.

 

பெருங்களூர் ஊராட்சியில் நிலம் எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் இரண்டு மாவட்ட எல்லைகள் தொட்டுக்கொள்ளும் இடத்தில் திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. நிலம் எடுப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த நிலையில் அப்போதைய மாவட்ட நிர்வாகம் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு பட்டா உடன் கூடிய இலவச வீட்டு மனைகள், மற்றும் வீடுகள், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன், புதிதாக தொழில் தொடங்க வங்கிக் கடன் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.



 

தங்கள் விவசாய நிலங்கள், குடியிருக்கும் பட்டா மனை பகுதிகளையும் விட்டுத் தர சம்மதித்தனர் இக்கிராம மக்கள். ஒரு வழியாக நிலம் கையகப்படுத்தப்பட்டு 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரம் கோடி மதிப்பில் பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ மாணவியர், தங்கும் விடுதிகள், அடுக்குமாடி விடுதிகள், பல்வேறு துறை கட்டிடங்கள்,  என பல்வேறு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.  பல்கலைக்கழகம் தொடங்கும் பொழுது  8 மாணவர்களுடன் துவங்கிய பல்கலைகழகத்தில், தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.



 

திருவாரூர் அருகே தியாகராஜபுரம் கிராம மக்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள். வசிக்கும் இடமும் பாதுகாப்பாக இல்லை. வசிப்பதற்கு மாற்று இடமும் இதுவரை தரப்படவில்லை. இப்பகுதி மக்கள் வசிப்பதற்கு மாற்று இடமாக குடவாசல் வட்டத்தில் உள்ள ஆதி திராவிட நலத்துறையின் கீழ் எட்டியலூர் கிராமத்தில் நஞ்சை நிலம் நேரடி பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளிடம் இருந்து கிரையம் தரப்பட்டு இப்பகுதியில் வசிக்கும் வீட்டுமனை இல்லாத தியாகராஜபுரம் ஆதிதிராவிட மக்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு வீட்டுமனை வழங்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார்.



 

இந்த பயனாளிகள் பட்டியல் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஐந்தாம் தேதியிட்டு ஆதிதிராவிடர் நல நன்னிலம் தனி வட்டாட்சியர் மூலம் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தியாகராஜபுரம் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2009ஆம் ஆண்டு மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பொன்.ரவீந்திரன் அவர்கள், பல்கலைக்கழகத்தின் பார்வையாளரான மேதகு குடியரசுத்தலைவர், பிரதமர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், உள்ளிட்ட பலருக்கும் கோரிக்கை மனுக்களை மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுப்பி உள்ளார்.

 

பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே இவர்கள் குடியிருப்பு அமைந்துள்ளதால் மேற்கொண்டு வளர்ச்சிப் பணிகளை பல்கலைக்கழக நிர்வாகத்தால் செய்ய இயலவில்லை. குறிப்பாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடுவது அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்கலைக்கழக நிதி கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் அளிப்பது போன்ற பணிகள் தடைப்பட்டுள்ளது. மேலும் மோசமாக பாழடைந்துள்ள இடத்தில் உயிருக்கு பயந்து இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர் எனவே அரசு அறிவித்தபடி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள பட்டா மனைகளில் விரைவாக புதிய வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என பேராசிரியர் அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற நோக்கில் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தேவையாகும் ஆரம்ப கட்ட பணிகளுக்கு நிதி உதவி செய்ய வழிவகை இல்லை என இவரது பரிந்துரைக் கடிதத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அப்போது நிராகரித்து விட்டது. தங்கள் பகுதிக்கு மிகப்பெரிய மத்திய பல்கலைக்கழகம் வருவதற்காக தாங்கள் வசித்து வந்த இடத்தை வழங்கிய மக்களுக்கு இதுவரை புதிய இடம் ஒதுக்கியோ அல்லது வீடு கட்டியோ இதுவரை தரவில்லை. தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடுக அரசு பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கி புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.