தஞ்சையிலுள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் பங்கேற்றார்.


அப்போது, ஆண்கள் இல்ல மாணவர்கள் ஒரு புறம் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் பெண்கள் இல்ல மாணவிகள் வந்து அமர்ந்தனர். மாணவர்கள் மத்தியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் திடீரென தேம்பி தேம்பி அழுதான். இதனையறிந்த இல்ல அலுவலர்கள், அவனை தேற்றி, ஏன் அழுகிறாய் என்று கேட்ட போது, 10ம் வகுப்பு படிக்கும் மீனா எனது அக்கா முன்னால் அமர்ந்துள்ளார். அவரை பார்க்க வேண்டும் என்றான். உடனடியாக அலுவலர்கள், அக்கா, தம்பியை அருகருகே அமர வைத்தனர். அப்போது இருவரும் மாறி மாறி கண்ணீர் விட்டனர். 




அப்போது அக்கா மீனா, தனது தம்பி அரவிந்தனிடம், "தம்பி உன்னை பார்த்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. நன்றாக இருக்கிறாயா? காலையில் என்ன சாப்பிட்டாய் ? நன்றாக படித்து பெரிய அதிகாரியாக வரவேண்டும்.  உடல் நிலை நன்றாக உள்ளதா?" என்று தம்பியுடன் வாஞ்சையுடன் பேசினாள்.அதற்கு தம்பி அரவிந்த், தான் நன்றாக உள்ளதாகவும், நீ எப்படி இருக்கின்றாய் என்று கேட்டான். இதைப் பார்த்த அங்கிருந்தோரும் தங்களை அறியாமல் அவர்களின் பாச நெகிழ்ச்சியை கண்டு அழுதனர்.


அப்போது, ரோபோ சங்கர் பல குரலில் பேசுவதற்கு பயிற்சி தருகிறேன், ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார். இதனையறிந்த அக்கா மீனா, தம்பி அரவிந்த் நீ சென்று பயிற்சி பெற்று வா என்று அனுப்பி வைத்தாள். சிறிது நேரத்தில் ரோபோ சங்கரின் நிகழ்ச்சியில் பார்த்து, பாசமலர்கள் ஒருவருக்கு ஒருவர் கவலையை மறந்து சந்தோஷத்தில் சிரித்து மகிழ்ந்தனர். பாசமலர்களை குறித்து அலுவலர்களிடம் கேட்ட போது, சிறு வயதில் மதுக்கூரில் தாய் தந்தை இல்லாததால், இல்லத்திற்கு வந்து விட்டார்கள். மாதந்தோறும் அரவிந்தை அழைத்து வந்து, அக்கா மீனாவை சந்திக்க வைப்போம். கொரோனா தொற்றால் சந்திப்பதில் தாமதமானது என்றார். தொடர்ந்து அனைத்து இல்ல மாணவர்களும், ரோபோ சங்கருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.


நிகழ்ச்சி குறித்து பேசிய ரோபோ சங்கர், " கொரோனா தொற்று முதல் அலையின் போது, தொற்று பாதித்தவர்களுக்கு உள்ள மன அழுத்ததை போக்குவதற்காக தஞ்சையில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் தங்கியுள்ள இடத்திற்கு சென்று நிகழ்ச்சி நடத்தினேன். இதே போல் இந்த இல்லத்தில் உள்ள மாணவ, மாணவிகள் வெளியில் செல்ல முடியாத நிலையில், அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்ததை போக்குவதற்காக, வந்துள்ளேன். பல நாடுகள் சென்று நிகழ்ச்சி நடத்தி வந்தாலும், உங்களிடம் நான் நிகழ்ச்சி செய்யும் போது தான் மிகவும் சந்தோஷமாகவும், மனநிம்மதியும் கிடைக்கிறது. பல மேடைகளில் நான் அவமானப்பட்டு விட்டு தான் இப்போது மேலே வந்துள்ளேன். உங்களுக்கு கீழே உள்ளவர்களை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு மேலே உள்ளவர்,  உங்களை பார்த்துக்கொள்வார்கள்" இவ்வாறு அவர் பேசினார். 




அப்போது பல்வேறு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பாடல்களை பாடியும் நடித்து காட்டினர். மாணவர்களை  ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களிடம் ரோபா சங்கர் கலந்துரையாடினார். தொடர்ந்து ஒரு மாணவி ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலை முழுவதுமாக பாடியதை கேட்ட ரோபோ சங்கர், இன்று சுதந்திர தினம், இன்றைக்கு தேவையான பாடல் பாடிய மாணவிக்கு நன்றி கூறி பாராட்டினார். மேலும் அந்த மாணவிக்கு ரூ. 500 பரிசாக வழங்கி பாராட்டினார்.


அப்போது அவரிடம் நடிகை மீராமிதுன் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றியுள்ளனர். ஒரு நாள் போலீசாரின் உடையணிந்து, பணியாற்றினால் அவர்களது நிலைமை தெரியும். எனக்கு வாட்ஸ் ஆப்பை தவிர எந்த விதமான இணையதள கணக்குகள் இல்லை. அதனால் எந்த நடிகை என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது என்றார்.