மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால், இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக நம்பப்பட்டு வருகிறது. மேலும், இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமி ஆகிய நிகழ்வும் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் கோயிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து கொண்டார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து தனது மகன் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். மேலும் தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக, கடந்த ஜுலை 2-ஆம் தேதி தனது பிறந்த நாளை மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மகனும் நடிகருமான விஜய் பங்கேற்கவில்லை. தந்தை மகன் இருவருக்கு நடுவிலும் பனிப்போர் சென்றுகொண்டிருப்பதாக தமிழ்த்திரை உலகு வட்டாரத்தில் ஒரு பேச்சு நடைபெற்றுக்கொண்டு இருக்கிற வேளையில், விஜயின் அரசியல் ஈடுபாடு போன்ற சில நிகழ்வுகளால் இருவருக்கும் நடுவே மனக்கசப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நடந்து வந்த நிலையில் விஜய் பெயரில் அவர் அர்ச்சனை செய்த நிகழ்வு சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
1978-ஆம் ஆண்டு அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். நாளைய தீர்ப்பு, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.