தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ பரவி எதிரில் இருந்த 5 குடிசை வீடுகளும் பற்றி எரிந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் மாநகராட்சி 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் கொண்டு வந்து கொட்டப்படும். இப்படி குப்பைகள் கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்றும் இதற்கு உறுதுணையாக அமைய திகுதிகுவென்று குப்பைகள் பற்றி எரிந்தது. 




மேலும், பற்றி எரிந்த குப்பைகள் காற்றின் வேகத்தில் எதிரில் அமைந்துள்ள வீடுகளில் விழுந்தது. இதில் குப்பை கிடங்குக்கு எதிரே இருந்த 6 வீடுகள் தீயில் எரிய ஆரம்பித்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர். தீப்பிடித்து எரிந்த வீடுகளில் ஒன்றில் இருந்த முன்னாள் இராணுவ வீரர் ஆரோக்கியசாமி (73) என்பவர் நடக்க முடியாமல் தீ விபத்தில் சிக்கி பலத்த தீக்காயம் அடைந்தார். உடன் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தஞ்சை தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் விமானப்படை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



மேலும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர நல அலுவலர் நமச்சிவாயம், நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் காற்றின் வேகத்தில் எதிரில் உள்ள வீடுகளில் வந்து விழுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதனால் குப்பைக்கிடங்கின் காம்பவுண்ட் சுவரின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.


காற்றடிக்காலம் தொடங்கி விட்டால் இப்பகுதியில் அவ்வபோது தீ விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இப்படி மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த தீவிபத்தில் இறந்தவர்கள் கதறி அழுதது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த பயங்கர தீவிபத்தால் ஜெபமாலைபுரம் பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. சாலை தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது. இதனால் வயதானவர்கள் மூச்சுவிட மிகுந்த சிரமப்பட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண