தஞ்சாவூர்: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டியே உள்ளது. நடிகர் விஜய் தி.மு.க. வின் ஊது குழலாக உள்ளார் என்று இந்து மக்கள் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Continues below advertisement


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முதன்முதலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கும்பகோணத்தில் முதன்முதலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாலா முன்னிலை வகித்தார். சிறப்ப விருந்தினராக இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு முதல் பிரதிஷ்டையை தொடங்கி வைத்து பூஜை செய்தார்.


தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடந்த த.வெ.க. மாநாடு சினிமா போன்ற மாநாடு. நடிகர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வன்மத்தை காட்டி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா உலகில் 3-வது பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவ பலத்தை உலகத்திற்கு காட்டியுள்ளோம். இதனால் தான் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு எதிரான அபராத வரி விதிப்பை விதித்துள்ளார். 


பல்வேறு எதிர்ப்பு கடந்து இந்தியாவை வல்லரசாக பிரதமர் மோடி நடத்தி வருகிறார். பிரதமர் மோடி குறித்து விஜய் பேசியது தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க.வுக்கும், தி.மு.க.விற்கும் தான் போட்டி என்று விஜய் கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டியே உள்ளது. நடிகர் விஜய் தி.மு.க. வின் ஊது குழலாக உள்ளார். தி.மு.க.வும் கிறிஸ்துவ அமைப்புகளும் சேர்ந்து விஜய்க்கு மாநாட்டில் எப்படி பேச வேண்டும் என பேச்சை எழுதிக் கொடுத்துள்ளனர். மக்கள் நீதி மையத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதேதான் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஏற்பட உள்ளது.


ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசுவதற்கு விஜய்க்கு வயதோ, அரசியல் அனுபவமோ கிடையாது. தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 3 சதவீத ஓட்டு தான் பெரும். 2026 தேர்தலில் இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியாக பா.ஜனதா, அ.தி.மு.க. உள்ளது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் 100 சதவீதம் வாக்களிப்பது போல் இந்துக்களும் கட்டாயமாக தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இந்துக்களை கேலி செய்யும் பொன்முடி , வைரமுத்து ஆகியோரை காப்பாற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.