வேளாங்கண்ணியில் தரமற்ற அழுகிய 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து விற்பனை செய்த 10 கடைகளுக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதில் கடற்கரையோர கிராம மக்கள் மட்டுமல்லாமல் கடற்கரை இல்லாத மாவட்டத்தில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இங்கு விற்கப்படும் வறுத்த மீன்கள் முழு மீன்களாக வண்ண நிறங்களோடு மிளகாய் தூள் கலந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அங்கு காட்சிகளுக்கு வைக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் பொரித்த மீன்களை வாங்கி உண்பது வழக்கம்.
இந்த நிலையில், ஒரு சிலருக்கு மீன் சாப்பிட்ட ஒரு சில மணி நேரங்களில் உடல் உபாதை ஏற்பட்டதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பெயரில் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வரும் கடைகளில் தரமற்ற அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய புகாரைத் அங்கு உறுதிப்படுத்தினார். தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 நபர்கள் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் தரமற்ற அழுகிய நீண்ட நாட்கள் ஆன பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடை ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரித்தனர். வேளாங்கண்ணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்