நாகை மாவட்டம் வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி கீழ கண்ணாப்பூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிகள், கோவில், பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் சாராயத்தை விற்று வந்துள்ளார். 

 

இதுகுறித்து வலிவலம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம்  அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி தாலிச் செயினை கேட்டுச் சென்ற போது, அதை கொடுக்காமல் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். மேலும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகளையும் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்தும் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காத்தால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு முத்து கிருஷ்ணனை பிடித்து காவல் நிலையத்தில்  ஒப்படைக்க சென்றனர்.






அப்போது சாராய வியாபாரி தப்பித்து ஓடிய நிலையில் சாராயாம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட் மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொட்டகையின் நடுவில் சாராயம் பதுக்கி வைப்பதற்காக பள்ளம் நோண்டப்பட்டு இருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கூரை கொட்டகையை வெட்டி சாய்த்து அந்த இடம் இருந்த தடம் தெரியாமல் ஆக்கினர்.

சாராய கடையை அந்த பகுதி மாதர் சங்க பெண்கள் அடித்து நொறுக்கி சாராய குடங்களை சாலையில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீதும் அதற்கு துணைபோகும் காவல்துறை மீதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுத்து சாராயம் இல்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.  மீண்டும்  சாராயம் விற்பனை நடந்தால் கிராம மக்கள் ஒன்றிணைந்து வீட்டை தீயிட்டு கொளுத்தி விடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.