தஞ்சாவூர்: இரு மடங்காக உயர்ந்த கேரட்டை வாங்காமல் எட்ட நின்று பார்த்து விட்டு ஓரமாக ஒதுங்கி செல்லும் நிலையில் தான் நடுத்தர மக்கள் உள்ளனர். காரணம் தங்கம் போல் கேரட்டின் விலையும் கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டே செல்கிறது.
காய்கறிகள் விலை உயர்வு
தஞ்சாவூரில் காய்கறி விலைகள் உயர்ந்து கொண்டே உள்ளது. அதிலும் ஒரு கிலோ கேரட் ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டதுதான் அதிர்ச்சி. தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. காமராஜர் மார்க்கெட்டுக்கு தினம்தோறும் தேனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
கேரட் விலை கிடுகிடு உயர்வு
இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்கி சில்லறை வியாபாரிகள் தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் மேற்கண்ட சில இடங்களில் மழை பெய்ததால், கடந்த சில நாட்களாக தஞ்சை மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது.
முக்கியமாக கேரட் கிலோ ரூ.100-யை தாண்டியது. ஒரு கிலோ கேரட் ரூ.110 விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு ரூ.40 முதல் விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் கிடுகிடுவென்று விலை உயர்ந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மற்ற காய்கறிகள் விலை
மேலும் தக்காளி கிலோ ரூ.56, உருளைக்கிழங்கு கிலோ ரூ.48, கத்தரிக்காய் கிலோ ரூ. 60,64,80, வெண்டைக்காய் கிலோ ரூ.34, அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70,80, புடலங்காய் கிலோ ரூ.40,46 க்கும், பாகற்காய் கிலோ ரூ.70 முதல் 80 ரூபாய்க்கும் முருங்கைக்காய் கிலோ ரூ.76 க்கும் பீர்க்கங்காய் கிலோ ரூ.38, 40 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பல்லாரி கிலோ ரூ.46க்கும், வெங்காயம் கிலோ ரூ.56க்கும் சேனைக்கிழங்கு கிலோ ரூ.96 க்கும், சேப்பங்கிழங்கு கிலோ ரூ.70க்கும், கருணைக்கிழங்கு கிலோ ரூ.76 க்கும், பீட்ரூட் கிலோ ரூ.56, 60 க்கும், பீன்ஸ் கிலோ ரூ.66க்கும், கேரட் கிலோ ரூ.110 க்கும், சவ் சவ் கிலோ ரூ.40 க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.76 க்கும், முள்ளங்கி கிலோ ரூ.36 க்கும், கொத்தவரங்காய் கிலோ ரூ.44, மாங்காய் கிலோ ரூ.60க்கும், காலிஃப்ளவர் கிலோ ரூ.60 க்கும், முட்டைகோஸ் கிலோ ரூ.50 க்கும், பரங்கிக்காய் கிலோ ரூ.22 க்கும், பூசணிக்காய் கிலோ ரூ.34க்கும், சுரைக்காய் கிலோ ரூ.26, 30க்கும், இஞ்சி கிலோ ரூ.170 க்கும், பூண்டு ரூ.230 க்கும் விற்பனை செய்யப்பட்டது.