ஆடுகளின் நண்பனாக வலம்வரும் திருவாரூர் வாசு. வாசுவை பார்த்தால் நமக்கு உணவு கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆடுகளும் வரத்தொடங்கியது.


உலகத்தில் தோன்றிய மனிதர்களின்  மனங்களை இணைப்பதற்கு முக்கியத் தேவையாக இருப்பது மொழி. அந்த மொழிகளிலும் தன்னுடையது பெரியது ஒரு மொழிக்காரர்களும், மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதும், மொழி ஆர்வலர்கள் விரக்தி கொள்வதும், அன்றாடம் நிகழ்கின்ற ஒன்று. ஆனால் உலக உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவான மொழி அன்புதான்.  இந்த மொழியின் வளர்ச்சியானது மற்ற உயிரிணங்களின் மேல் ஆதிக்கம் செலுத்த,செலுத்த வளர்கின்ற ஆற்றலையும் அற்புதத்தையும் வெளிப்படுத்துகின்ற தன்மைகொண்டது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. அதனை மெய்ப்பிக்கும் வகையில்தான் விலங்கினங்கள் பலவும் மனிதனின் அன்புக்கும் அரவணைப்புக்கும் அடிபணிகின்றன. அப்படி திருவாருரில் அன்பு மொழி பேசி ஆடுகளை அரவணைத்து வைத்துள்ளார் ஒரு பகுதி நேர ஆசிரியர்.


திருவாரூர் காட்டுக்காரத் தெருவை சேர்ந்தவர் வாசு (54). இவர் ஓரு பட்டதாரி வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகின்றார்.  கிராம சூழலில் வளர்ந்தவர் என்பதால் கால்நடைகள் மீது பற்று கொண்டவர். திருவாரூர் நகரப்பகுதியில் வசிப்பதால்  கால்நடைகளை தங்கள் வீட்டில் வளர்க்க வசதியில்லை. அதனால் தனது வீட்டுப் பகுதியில் தெருவில் மேய்ந்துகொண்டிருக்கின்ற கால்நடைகளை பரிவோடு தடவிக்கொடுப்பதும், அவற்றுக்கு இலை தழைகளை உடைத்துபோடுவதுமாக வாசு தனது ஆசையை பூர்த்தி செய்தார். குறிப்பாக இரண்டு ஆடுகள் வீட்டின் அருகே மேய்ந்தபோது அதற்கு இழை தழைகளை உடைத்துபோட்டார். தினமும் வாசுவை பார்த்தால் நமக்கு உணவு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தினமும் வாசுவின் வீட்டை தேடி 2  ஆடுகளும் வரத்தொடங்கின. அந்த இரண்டு ஆடுகளின்பின் ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கி  இன்று 40 ஆடுகள் தினமும் காலை வேளைகளில் உணவுத் தேவைக்காகவும், வாசுவின் அன்பான உபசரிப்புக்காகவும் வரத்தொடங்கிவிட்டன.




அந்த ஆடுகள் வாசுவிடம் மகுடிக்கு மயங்கிய பாம்புகள்போல அவர் சொல்கின்ற அனைத்தையும் செய்கின்றன. வா என்றால் வருவதும், முட்டு என்றவுடன்  முட்டுவதையும், அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். வாசுவின் மனைவி ஜெயந்தி, மகன் ஸ்ரீராம் ஆகியோர் முதலில் இதனைத் தொல்லையாக கருதியபோதும், இந்த ஆடுகளும், வாசுவும் மனதளவில் அன்பால் ஒன்றுபட்டு நிற்பதை பார்த்து அவர்களும் இந்த அன்புக்கு அடிமையாகிவிட்டனர். தான் டியூசன் எடுக்கும் நேரம்போக மீதமுள்ள நேரங்களில் வருகின்ற ஆடுகளுக்கு இலை,தழைகளை சேகரிப்பதை அன்றாடப்பணிகளில் ஒன்றாக செய்து வருகின்ற வாசுவுக்கு தெரிந்ததெல்லாம் அன்பு மொழிதான். அதனை கொண்டுதான் ஆடுகளின் நண்பராகிவிட்டார் வாசு. இவரைப்போல நாமும் ஜீவராசிகளிடத்தில் அன்பு செலுத்துவோம். உயிரினங்களை போற்றுவோம்.