தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு பகுதியாக இருப்பது திருவாரூர் மாவட்டம் தான். மேலும் இந்த சாலையில் திருவாரூர் மாவட்டத்தில் தான் 4 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இதேபோல் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பேரளத்தில் ஒரு ரெயில்வே கேட்டும், திருவாரூர்-மன்னார்குடி பாதையில் சிங்களாஞ்சேரியில் ஒரு ரெயில்வே கேட்டும் அமைந்துள்ளது. இந்த 6 ரெயில்வே கேட்டுகள் அவ்வப்போது மூடப்படும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நாகை-தஞ்சை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில அமைந்துள்ள நீடாமங்கலம் ரெயில்வே கேட் என்பது நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாதையில் மன்னார்குடியில் இருந்து சென்னை, கோவை, மானாமதுரை ஆகிய பகுதிக்கு செல்லும் 3 ரெயில்கள் நீடாமங்கலம் ரெயில்வே கேட்டில் ரெயில் என்ஜின் திசை மாற்றப்பட்டு இயக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் இந்த ரெயில்வே கேட் அடிக்கடி அரை மணி நேரத்திற்கு மேலாக மூடப்படும்.



 

ரெயில்வே கேட்டுகளில் சிக்கும் வாகனங்கள், அதில் பயணம் செய்பவர்கள் சொல்ல முடியதா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த வழிபாதை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற முக்கிய ஸ்தலங்களுக்கும் செல்வதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து என்பது அதிகமாக இருக்கும். இதில் கேட்டில் சிக்கும்  வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதுடன், அவசர ஆபத்து காலங்களில் எந்த திசையிலும் செல்ல முடியாத அவலநிலை இருந்து வருகிறது. இந்த சுழ்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் ரெயில்வே நிலையம் அருகில், மயிலாடுதுறை சாலையில் பேரளம் ரெயில் நிலையம் அருகில், திருவாரூர் மன்னார்குடி சாலையில் சிங்களாஞ்சேரி ரெயில் கேட் அருகில் என 3 மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார். அறிவிப்பு வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 3 ரெயில்வே மேம்பாலமும் கட்டப்படாமல் இருந்து வருகிறது.

 

குறிப்பாக காரைக்கால்-தஞ்சை வழி பிரதான ரெயில் பாதையாக இருப்பதால் பயணிகள் ரெயில், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் மற்றும் பருவ காலத்தில் பொது விநியோக திட்டத்திற்காக நெல், அரிசி ஏற்றி செல்லும் சரக்கு என ரெயில் போக்குவரத்து மிகுந்த பாதையாக இருந்து வருகிறது. இதனால் கால நேரத்தை கணக்கிட முடியாத நிலையில் சரக்கு ரெயில் போக்குவரத்து இருப்பதால் ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி அடைக்கப்படுவதால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் திருவாரூர்-மன்னார்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2013 ஆம் ஆண்டு 27 கோடி 6 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனை அடுத்து ரெயில்வே நிர்வாகம் உடனடியாக தண்டவாள பாதையில் பாலம் கட்டும் பணியினை தொடங்கி நிறைவு செய்தது. இந்த பாலம் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் இணைப்பு சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக ரெயில்வே துறையால் கட்டப்பட்ட பாலம் அந்தரத்தில தொங்கும் நிலையில் இருந்து வருகிறது.



 

இதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் பேரளம் ரெயில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக மிக முக்கியமான நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் என்பது பிரதான கடைவீதி சாலையில் அமைந்துள்ளதால் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால் சாலை மார்க்கமாக பயணம் செய்யும் 4 டெல்டா மாவட்ட பொதுமக்கள் நாள்தோறும் ரெயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் ஏராளமான சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே திருவாரூர் மாவட்டத்தில் பிரதான 3 ரெயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளில் உள்ள பிரச்சனைகளை கலைந்து, மேம்பாலம் விரைந்து அமைத்தால் தான் திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாதுறை டெல்டா மாவட்டத்திற்கு விடியல் பிறக்கும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.