மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023 -ஆம் ஆண்டுக்கான கோடை விழா கடந்த ஜூன் 23ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களில் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்று வண்ணமயமான பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியமான கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றினர்.
நிறைவு நாளான உத்ரகாண்ட், கர்நாடகா ஆந்திரா, கோவா மற்றும் ஒடிசா மாநில கலைஞர்கள் பங்கேற்று அப்பகுதி நடனங்களை நடனமாடினர். உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும் நாட்டுப்புற நடனங்களில் ஒன்றான சபேலி நடனம், கர்நாடகா மாநில கொடவ பெண்கள் பாரம்பரிய உடை மற்றும் நகைகள் அணிந்து ஆடிய உம்மத்தட்டா நடனம், ஆந்திர மாநில கலைஞர்கள் தலையில் பித்தளை பாத்திரத்தை வைத்துக் கொண்டு கை-கால்களை வேகமாக அசைத்த போதும், தலையை அசைக்காமல் ஆடிய கரகாலு நடனத்தில் தலையில் 4 அடுக்கில் பாட்டில்களை நிலைநிறுத்தி மகுடி வாசிப்புக்கேற்ற வகையில் ஆடிய நடனம்,
கோவா மாநில கலைஞர்கள் சிக்மோ திருவிழாவின்போது ஆடும் சமை (விளக்கு) நடனம், ஒடிசா மாநில கலைஞர்கள் ஆடிய ஒடிசி கிளாசிக்கல் நடனத்தின் முன்னோடி நடனம் என கூறப்படும் கோட்டிபுவா நடனத்தில் பெண்வேடமிட்டு உடலை வில்லாக வளைத்து ஆடிய நடன நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் திரளான கலை ரசிகர்கள் பங்கேற்று நடனங்களை கண்டு ரசித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்