மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கப்பூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகள் 12 வயதான கீர்த்தனா ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கப்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருப்பதாகவும், கம்பியில் பல இடங்களில் ஜாயிண்ட் அடித்து மின்விநியோகம் செய்யப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாலும் உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்த சூழலில் கப்பூர் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீர்த்தனா மீது இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த சிறுமி கீர்த்தனா மூர்ச்சை அடைந்து அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கப்பூர் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்கம்பியை சீரமைக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூர் மார்க்கத்தில் மங்கைநல்லூர் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 




காலை 10:30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இருப்பினும், வருவாய் துறை மற்றும் மின்வாரியத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கிராம மக்கள் சாலை ஓரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மின் தாக்குதலுக்கு உள்ளான குழந்தையின் உடல்நிலை தேறி வரும் நிலையில், தொடர்ந்து, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.


ABP Nadu செய்திகளை  டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள : 


என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.