குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்ட்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திமுக சார்பில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர செயலாளர் தமிழழகன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், ஜெ பேரவை செயலாளர் அயூப்கான், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் சார்பில், உச்சிபிள்ளையார் கோயில் அருகே முப்படை தளபதியின் உருவப்படத்துக்கு பொதுமக்கள், வணிகர்கள் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சங்கத்தின் செயலாளர் வி.சத்தியநாராயணன் விபத்தில் இறந்தவர்களின் நாட்டுப்பற்றையும், சேவைகளை எடுத்துரைத்தார்.
அதே போல், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரடியில், விபத்தில் இறந்த ராணுவ வீரர்களுக்கு இந்து மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணிச் பொது செயலார் குருமூர்த்தி அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாவட்ட இளைஞரணி தலைவர் வீரப்பன் ஆகியோர் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பாக, இந்திய நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவத் படத்துக்கு மாலை அணிவித்து, அகில பாரத இந்து ஆன்மீக பிரிவு, சிவசேனா கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்த பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைவர் துரை.திருவேங்கடம், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஆர்.கண்ணன், சிவசேனா கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட பொதுச்செயலாளர் குட்டி சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே இந்துமக்கள் கட்சி அனுமன் சேனா பிரிவின் சார்பில், பொதுச் செயலாளர் பாலா தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.இதே போல் தஞ்சாவூர் ரயிலடியில் பாஜகவினர் சார்பில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.விபத்தில் பலியான முப்படை தளபதியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியத்திலுள்ள சாட்சிநாதசுவாமி கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் மோட்ச தீபம் ஏற்பட்டது.
இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் வி.ஆர்.திருமண மண்டபத்தில் நடைபெற்ற விக்னேஷ்-மணிபாரதி திருமண விழாவில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கூறி, திருநீற்றுப் பிரசாதம், சைவத்திருமுறைகள், சைவ சமயாச்சாரியர் நால்வர் திருவுருவப்படம் போன்றவை பரிசளித்தார். அத்துடன் நேற்று குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உயிர்த்தியாகத்தை நினைவு கூர்ந்து தேசிய கொடியுடன் வீரவணக்கம் செலுத்தினர்.