கும்பகோணம் அருகே ஆடுதுறை மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புவியீன் அப்துல்காதர், ஆடுதுறை பேருந்து நிலையம் எதிரே உள்ள இவரது பட்டா நிலத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கும்பகோணம் சீர்காழி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அதற்காக சாலையோரம் உள்ள புவியீன் அப்துல்காதரின் பட்டா இடத்தில் இருந்து 2 அடியை நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றியுள்ளது.
அதற்கான தொகையாக ரூபாய் 28,000 வழங்குவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் புவியீன்அப்துல்காதர், இடம் அவரது சகோதரர்களுடன் கூட்டு பட்டாவில் உள்ளதால் அதனை அவரது பெயரில் பிரித்து தனி பட்டாவாக கொண்டு வந்தால்தான் ரூபாய் 28 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த மார்ச் மாதம் ஆடுதுறை கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரிடம் பட்டா பிரித்து வழங்க மனு அளித்தபோது அதற்கு 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புவியீன் அப்துல்காதர் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலில் நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றிய இடத்திற்கு பணத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், அதற்கான விண்ணப்ப படிவத்தில் ஆடுதுறை கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரிடம் கையொப்பம் வாங்கி வரும்படி அதற்காக பணம் எதுவும் நீங்கள் அவருக்கு தர வேண்டாம் என கூறி அனுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக ஆடுதுறை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கையொப்பம் வாங்க வந்த புவியீன் அப்துல்காதரை, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் அழைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆடுதுறை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தனது சகோதரருடன் வந்த புவியீன் அப்துல்காதர், வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய விண்ணப்ப படிவத்தில் விஜயகுமாரிடம் கையொப்பம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் 5500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்க கடந்த ஆட்சியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டபதாகவும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 5500 லஞ்சம் கேட்பதாகவும் அவர் சகோதரர் வேதனையுடன் தெரிவிப்பதை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விஏஒ விஜயகுமார் கூறுகையில்,
நான் லஞ்சம் வாங்கியதாக அவர்கள் கூறி வெளியிட்டுள்ள வீடியோ உண்மை இல்லை, அவர்கள் பிரச்சினையே வேறு, அவர்கள் பட்டாதாரர் பெயர் இல்லாமல் அவர்கள் வாரிசு பெயருக்கு உரிமையாளர் என கேட்டனர். அவ்வாறு கொடுக்க முடியாது. பட்டாதாரர் பெயருக்கு வேண்டுமென்றால் தருகிறேன் என கூறியதால் இந்த பிரச்சனை.
தற்போது கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் அவர்கள் மீது புகார் கொடுப்பது தொடர்பாக வட்டாட்சியரிடம் ஆலோசனை கேட்டு வந்துள்ளேன். வட்டாட்சியர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது புகார் அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.