திருமணத்தடை, குழந்தை வரம் மற்றும் தோஷங்களை போக்கி அருளும் வல்லம் ஏகௌரியம்மன் என நம்பப்படும் தெய்வம் அமைந்த கோயிலின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம். தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோயில்தான் வல்லம் ஏகௌரியம்மன் கோயில். சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகௌரியம்மன். சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகைச் சூடப் போர்க்களம் செல்லும் போதும் இந்தத் தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம். காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எட்டுத் திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் தேவி ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தமுடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளது. இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனை காண்பது அரிது. முதலாம் ராஜராஜ சோழனின் 6வது ஆண்டு (கி.பி.991) கல்வெட்டில் அக்காலத்தில் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என அழைக்கப்பட்ட ஏகெளரி அம்மனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது. கி.பி. 1535 ஆம் ஆண்டில் செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசரானார். அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் இளவரசரானார். இவர்களுடைய ஆட்சியில் வல்லம் நகரம் மிகச் சிறந்து விளங்கியது. இருவரும் இணைந்து வல்லம் ஏகெüரியம்மன் கோயிலைப் புதுப்பித்தனர். இவ்வாறு புராணப் பெருமையும், வரலாற்றுச் சிறப்பும் கொண்டது வல்லம் ஏகௌரியம்மன் கோயில் என நம்பப்படுகிறது தஞ்சன் என்ற ஒரு அசுரனின் அக்கிரமங்களை அறிந்த தேவியின் முகத்தில் உக்கிரம் ஏற, எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தி அசுரனை நோக்கிப் புறப்பட்டாள் தேவி. இதையடுத்து, அசுரனுக்கும், தேவிக்கும் கடும் போர் மூண்டது. இதில், அசுரனை வதம் செய்தார் தேவி. உயிர் பிரியும் நேரத்தில் அசுரன், தேவியைப் பணிந்து பெண்மையை இழிவாகப் பேசிய என்னை மன்னிக்க வேண்டும். இந்தப் பகுதி என் பெயரால் தஞ்சாபுரி என வழங்க வேண்டும் எனவும் வேண்டினான். அப்படியே வரம் தந்தேன் என்றாள் தேவி என நம்பப்படுகிறது
Vallam Egowriyamman : வல்லம் ஏகௌரியம்மன் கோயிலின் சிறப்புகள் தெரியுமா? இதை கண்டிப்பா படிங்க..
என்.நாகராஜன் | 11 Aug 2022 09:57 AM (IST)
திருமணத்தடை, குழந்தை வரம் மற்றும் தோஷங்களை போக்கி அருளும் வல்லம் ஏகௌரியம்மன் என நம்பப்படுகிறது
ஏகௌரியம்மன்
Published at: 11 Aug 2022 09:56 AM (IST)