தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே 2,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ரேஷன் அரிசி மூட்டைகளைக் கடத்திச் சென்று கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சாவூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவ்வழியே வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் 2,050 கிலோ எடையுடைய ரேஷன் அரிசி 41 மூட்டைகளில் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இது தொடர்பாக லாரி உரிமையாளரும், ஓட்டுநருமான புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி நெட்டையன் குடியிருப்பைச் சேர்ந்த ஏ. மாதவன் (20), சுமை தூக்கும் தொழிலாளியான திருமயம் மாவடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ். ராஜ்குமார் (19) கைது செய்யப்பட்டனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.





தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் ரேஷன் கடைகளில் இலவசமாக மக்கள் பெறும் அரிசியை விலை கொடுத்து வாங்கி அதை பாலீஸ் செய்து பிற மாவட்டகளுக்கு கடத்தி செல்வது நடந்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்பிரிவினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பேராவூரணியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





கும்பகோணம் அருகே குட்கா பறிமுதல்

கும்பகோணம் அருகே சுவாமிமலை பெரிய கடைத்தெரு பகுதியில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா உத்தரவின் பேரில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முஸ்லிம் தெரு அப்துல் அஜீஸ் மகன் நிஷார் அகமது (36) என்பவர் பெட்டிக் கடையில் ஆய்வு செய்த சுமார் 40 கிலோ குட்காவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிஷார் அகமதை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினரை சீரழிக்கும் இந்த புகையிலை பொருட்களை முழுமையாக ஒழிக்கும் வரை போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவித்தனர்.

இதேபோல் தஞ்சை கரந்தை கொடிக்கார தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், 200க்கும் மேற்பட்ட ஃபுல் பாட்டில்கள் கர்நாடகா மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்டு, தஞ்சாவூர் நகரத்தில் இயங்கும் அரசு மதுபான பார்களில், கட்டிங் கேட்கும் குடிமகன்களுக்கு விற்பனை செய்வதற்காகவும், ஒரு டன் அளவிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து இருப்பதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து போலீசார் போதைப்பொருள்களையும், கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.





இதையடுத்து, தனிப்படை போலீசார் அந்த வீட்டில் இருந்த  பிரபு (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மூட்டை மூட்டையாக கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட பொருட்களை பல்வேறு சிறிய கடைகளுக்கு வியாபாரிகள் மூலம் தினமும் அதிகாலையில் அனுப்பி வைக்கப்படுவதாக பிரபு தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த நகர டி.எஸ்.பி., ராஜா பிரபுவை கைது செய்து கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும், குட்கா மற்றும் மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு வரும் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண