தமிழகத்தில் சிறுதொழில் வளர்ச்சிக்காக  தொழில்துறையில் பின்னடைந்த மாவட்டங்களில் தொழிற் பேட்டைகளை அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) மூலம்  தமிழக அரசு நிறுவியது. இந்த தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகளுக்கு தேவையான கட்டிடம், மின்வசதி,உட்புற சாலை, பணியாளர் குடியிருப்பு உட்பட பல அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு சிறுதொழில் முனைவோருக்கு கட்டிடமாகவும், காலி மனைகளாகவும் விற்கப்பட்டு வந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலையிலும், கும்பகோணம் அருகே திருபுவனத்திலும் இது போன்ற தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. கும்பகோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் அலுமினிய பாத்திர உற்பத்தி, செராமிக், ப்ளாஸ்டிக், எஞ்சினியரிங் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கும்பகோணம் மாநகர பகுதி வளர்ச்சி காரணமாக நகர்புற மாஸ்டர் ப்ளான் திட்டம் 1995 ஆம் ஆண்டு அமல்படுத்தபட்ட பிறகு மாநகர எல்லைக்குள் புதிய தொழில் நிறுவனங்களுக்கு பெரும்பாலும் அனுமதி கிடைப்பதில்லை.




இதனால் சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டினர். ஆனால் அந்த தொழில்பேட்டைகளில் மனை விலை நகர்புற மனைகளை விட கூடுதலாக நிர்ணயம் செயப்பட்டிருந்ததால் முதலீடு கூடுதலானது. இதனால் சிட்கோ தொழில்பேட்டைகளில் புதிய தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏராளமானோர் தொழில் தொடங்க முடியாமலும், சிலர் வேறு பகுதியில் தொழிலை தொடங்கி நடத்தி வந்தனர்.இதனால் சிட்கோவில் தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை குறைந்தும்,போதுமான வரவேற்பு இல்லாமல் போனது. இதனை கருத்தில் கொண்டு, தற்போது தமிழக அரசு சிட்கோ தொழிற்பேட்டைகளில் மனை விலையை 30 சதவிகிதமாக குறைத்துள்ளது. கும்பகோணத்தில் தொழில்மனை ஏக்கருக்கு 3 கோடியே 4 லட்சத்தில் இருந்து 73 சதவிகிதம் குறைக்கப்பட்டு 81 லட்சத்து 89 ஆயிரமாக புதிய விலை நிர்ணயம் செய்யயபட்டுள்ளது. வரலாறு காணாத இந்த விலை குறைப்பு மிகவும் வரவேற்கதக்கது.




இதனால் கும்பகோணம் மாநகரை ஒட்டி அமைந்துள்ள சிட்கோ தொழில்பேட்டையில் பல புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. மாநகர் பகுதியில் செயல்படும் சிறுதொழில் நிறுவனங்கள் இட தட்டுபாடு காரணமாக தங்கள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவதில்லை. தமிழக அரசின் இந்த விலை குறைப்பு அறிவிப்பினால் சிட்கோ தொழில்பேட்டையில் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது  என தஞ்சாவூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.கிரி, தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.