தஞ்சாவூர்: 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தீபாவளியை கொண்டாட அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளிக்கு முன்பாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளத்தை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுகிறோம் :


13 ஆண்டாக பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த அக்டோபர் மாத சம்பளம் 12,500 ரூபாயை தீபாவளிக்கு முன்னதாக கிடைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டால் மட்டுமே நடக்கும். பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளமானது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் அனுப்பி வைக்கிறது.


பின்னர் மாவட்ட அலுவலகங்கள் அதனை  5 ந் தேதிக்குள் நேரிடையாக பகுதிநேர ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளத்தை பட்டுவாடா செய்கிறது. இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் தமிழ்நாடு அரசு மூலமாக 2,500 ரூபாய் என இரண்டு பரிவர்த்தனையாக பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரே தேதியில் மொத்தமாக 12,500 ரூபாயும் கிடைப்பதில்லை. மேலும் தாமதமும்  ஆகிவிடுகிறது. இந்த தீபாவளி நேரத்தில் 12,500 ரூபாய் சம்பளத்தை மொத்தமாகவும், விரைவாகவும் வழங்க வேண்டும் என முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். 


தற்போது அக்டோபர் 31 தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை, தொடர்ந்து அடுத்த நாள் நவம்பர் 1-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் சம்பளத்தை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வரின் நல்ல முடிவை எதிர்பார்த்து காத்துள்ளோம். குறைவான சம்பளத்தில் மாணவர்களின் கல்வியின் தரம் உயர பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரும் இந்த தீபாவளியை உற்சாகமாக கொண்டாட வேண்டும். இதற்கு கருணையுள்ளத்துடன் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எனவே தமிழக முதல்வர் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாத சம்பளத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கினால் அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட இயலும். திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து இந்த  தீபாவளியை மகிழ்ச்சியான தீபாவளியாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.