தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்பீட்டர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


மாணவர் பேரவை தேர்தல்


தொடர்ந்து பேரவையின் தொடக்க விழா பேரவை மாணவப் பொறுப்பாளர்களின் பணி ஏற்பு விழா மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகளுக்குத் தலைமை பண்பு பயிற்சி முகாம் ஆகியவை நடைபெற்றன.


நிகழ்வுக்குத் கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார் கல்லூரி தேர்வு நெறியாளர் மலர்விழி முன்னிலை வகித்தார். கல்லூரி பேரவை துணைத்தலைவர் முனைவர் ரமா பிரியா வரவேற்புரை வழங்கினார்.


தேர்வு செய்யப்பட்ட மாணவிகள்


தலைமைப் பண்பு மென்திறன் பயிற்சியாளர், ஸ்டாலின் பீட்டர் பாபு  மாணவர் பொறுப்பாளர்கள் மற்றும் வகுப்புப் பிரதிநிதிகளுக்குத் தலைமைப் பண்பு பயிற்சி அளித்தார். மாணவர் தலைவராக மூன்றாம் ஆண்டு பி.எஸ்ஸி புள்ளியியல் மாணவி சோனா அகல்யா, இளநிலை மாணவத் துணைத் தலைவராக இரண்டாமாண்டு இளங்கலை மாணவி வைசாலி, முதுநிலை மாணவர் துணைத் தலைவராக முதலாம் ஆண்டு முதுகலை ஆங்கில மாணவி சாஹிரா பேகம், மாணவர் செயலாளராக இரண்டாம் ஆண்டு பி.எஸ்ஸி கணிதவியல் மாணவி பாரதி, மாணவர் இணைச் செயலராக முதலாம் ஆண்டு இளங்கலை தமிழ் மாணவி ரிஷ்வானா பானு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.




மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்


இம்மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இறுதியாக ஆங்கில உதவிப் பேராசிரியர் முனைவர் கவிதா நன்றியுரை வழங்கினார். தேர்தல் ஏற்பாடுகளைச் ஆங்கில இணைப் பேராசிரியர்  முனைவர் சபுருன்னிசா பேகம் செய்திருந்தார். அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


கிராமப்புற மாணவிகளுக்காக தொடங்கப்பட்டது


தஞ்சாவூரில் இயங்கிவரும் தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரி தான் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியாகும். தஞ்சை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மேல்நிலைக்கல்வியை முடித்த மாணவிகளுக்கு மேற்படிப்பு படிப்பதற்காக அரசால் ொடங்கப்பட்ட இந்த கல்லூரி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.


1984ம் ஆண்டில் கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டது


இக்கல்லூரி, தமிழக அரசால் 1966ம்  ஆண்டில் அரசினர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சை அரண்மனைக் கட்டிடத்தில் மூன்று புகுமுக வகுப்புகளைக் கொண்டு இக்கல்லூரி செயல்பட தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1969ம் ஆண்டு முதல் பட்ட வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970ம் ஆண்டில் புதிதாகக் கட்டப்பட்ட சொந்தக் கட்டிடத்தில் கல்லூரி மாற்றப்பட்டது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த இக்கல்லூரி 1982 பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் வந்தது. 17.9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கல்லூரி இது. 1972ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. 1984ம் ஆண்டில் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. கிராமப்புறத்தை சேர்ந்த பெற்றோர்களின் நன்மதிப்பை இந்த கல்லூரி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.