உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலமாக கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த சகோதரிகள். குவிகிறது பாராட்டுக்கள்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னர் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஸ்டாலினிடம் வழங்கினார்கள். அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு மனுவாக திருவாரூர் மாவட்டம் வாட்டார் கிராமத்தைச் சேர்ந்த கயல்விழி, கார்குழலி என்கிற சகோதரிகள் அளித்த மனுவிற்கு உடனடியாக தற்பொழுது தீர்வு காணப்பட்டுள்ளது.இதனால் தங்கள் கிராமத்தில் குடிநீர் தேவை தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சகோதரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கயல்விழி மற்றும் கார்குழலி என்கிற சகோதரிகள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்த மனுவில் எங்கள் ஊர் வாட்டார்  கிராமத்தில் குடிநீர் மிகவும் உப்புத் தன்மை வாய்ந்த குடிநீராக உள்ளது. இந்த நீரை குடிப்பதால் எங்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகிறது. ஆகையால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஸ்டாலினிடம் வழங்கியிருந்தனர்.


இந்நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்கு தனி துறை அமைக்கப்பட்டு அதற்கென தனி செயலாளர் அமைக்கப்பட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் சகோதரிகள் கொடுத்த மனுவிற்கு தீர்வு காணும் வகையில் வாட்டார் ஊராட்சியில் அரசு அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகியோர் அறிக்கை வாயிலாக ரூபாய் 8 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



இதற்கான ஆணையை இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கிய சகோதரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆகியோர் வழங்கினர். இதற்கு நன்றி தெரிவித்த சகோதரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த சகோதரிகளுக்கு வாட்டார் கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சிறுமிகளின் இந்த கோரிக்கை பலனளித்ததால் கிராமமே அவர்களை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமின்றி சிறுமிகளை துணிந்து வளர்த்த அவர்களின் பெற்றோருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட சிறுமிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியும், பாராட்டால் கிடைத்த மகிழ்ச்சியுமாய் இரட்டை மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.