சீர்காழி வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இன்று சீர்காழி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் மருந்து இருந்தவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவருகிறது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 33 ஆயிரம் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒன்றாக தமிழகத்தில் வரும் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி அவசியம் செலுத்திகொள்ள மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியும் வருகிறது. தயக்கமும் ,அச்சமும் இன்றி பொதுமக்கள்தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மே 20 ஆம் தேதி முதல் 18 வயதுக்குமேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தி செயல்படுத்திவரும் நிலையில் சீர்காழி வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக சீர்காழி அரசு மருத்துவமனை,திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதரநிலையம்,நல்லூர், குன்னம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிகளும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
கடந்த சில தினங்களாக சீர்காழி அரசு மருத்துவமனை, திருவெண்காடு ஆரம்ப சுகாதரநிலையம்,கொள்ளிடம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமின்றி ஒரு சிலர் மட்டுமே முகாம்களில் வந்து தடுப்பு ஊசி செலுத்தி வந்தனர்.
இந்த சூழலில் இன்று சீர்காழி நகராட்சி தொடக்கபள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இங்கு தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வமுடன் வந்தனர். ஆனால் மருந்துகள் குறைவாகவே இருந்தது. இருந்தவரை தடுப்பூசி மருந்துகளை மக்களுக்கு செலுத்தி விட்டு , மருத்துவத் துறையினர் முகாமை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மேலும் தடுப்பூசி இல்லாததால் ஆர்வமுடன் ஆதார் அட்டைகளை எடுத்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் தடுப்பூசி செலுத்த வந்திருந்த 45 வயதுக்கு மேற்பட்டோர் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.
மேலும் சீர்காழியில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பலருக்கு இரண்டாவது டோஸ் 84 நாட்கள் கழித்து செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றனர். கோவேக்சின் தடுப்பூசி சீர்காழி வட்டாரத்தில் செலுத்தப்படுவதில்லை. ஆகையால் அரசு அறிவித்துள்ளப்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சீர்காழி வட்டாரத்தில் அதிகளவு தடுப்பூசி மருந்துகளை மாவட்ட சுகாதார இயக்கம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.