திருவாரூர் அருகே வசித்து வரும் தந்தையை இழந்த 10ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய 15 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் தங்கி வருகிறார்.  நேற்று இரவு சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கடைக்கு சென்ற சிறுமி திரும்பி வராத காரணத்தால் அவரது அத்தை மற்றும் அம்மா ஆகியோர் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். 


இந்த் நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்  யாரும் குடி இல்லாத ஒரு வீட்டில் மயக்கம் அடைந்த நிலையில் சிறுமி ஒருவர் இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர், அச்சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்ததால் பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமோ என்ற கோணத்தில் நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில் மூன்று பெண் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.


சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும், பொறியியல் படிக்கும் மாணவனான சந்தோஷுக்கும் நட்பு இருந்த நிலையில், பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சிறுமியை அவரது வீட்டினர் அனுப்பிய போது சிறுமி சந்தோசை சந்தித்து தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமியை காணவில்லை என்று அவரது வீட்டார் எங்கு பார்த்தாலும் தேடி அலைந்துள்ளனர். இந்த தகவல் சிறுமிக்கு தெரியவரவே வீட்டில் மாட்டி கொள்வோம் என்பதால் தானே தனது கைகளைக் கட்டிக் கொண்டு பாழடைந்த வீட்டில் மயக்கம் போட்டு கிடப்பது போன்று நடித்துள்ளார்.


அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சிறுமியை மயக்க நிலையில் இருப்பதாக நினைத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பிறகு சிறுமி வீட்டாரையும் காவல்துறையினரையும் திசை திருப்பும் வகையில் தன்னை அடையாளம் தெரியாத இரண்டு பேர் உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கி கையை கட்டி தூக்கிச் சென்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் செய்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட உண்மைகள் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் பொறியியல் மாணவரான சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.