மன்னார்குடியில் முன்விரோத தகராறில் நாம்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தி மிளகாய்பொடி தூவி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாம்தமிழர் மாவட்ட செயலாளர்  நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.


திருவாரூர் மாவட்ட, நாம்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் மீது முன்விரோதம் காரணமாக நேற்று முன் தினம் இரவு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை தன்மீது  மிளகாய்பொடி தூவி பணம் கொள்ளையடித்து விட்டதாக அவர் தெரிவித்ததால் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பஸ் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலமுருகன் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் மதுக்கூர் சாலையில் லெக்கனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.




அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் மதுக்கூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பாலமுருகனை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அப்படியேபோட்டுவிட்டு மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். அப்பகுதி வழியாக வந்தவர்களின் உதவியோடு பாலமுருகன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து பாலமுருகன் போலீசாரிடம் மர்ம நபர்கள் தன் மீது மிளகாய்பொடியை தூவி விட்டு தாக்கியதோடு, கையில் வைத்திருந்த 3 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பாலமுருகன் கூறியதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.




அதனால் தொடர்ந்து மேல் நடவடிக்கை எதும் எடுக்காமல், பாலமுருகனிடம் சம்பவம் நிகழ்ந்தது குறித்து தீவிரமாக விசாரித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பாலமுருகன் போலீஸாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்றும், மோட்டார் பைக் முன் பக்க கவரில் பணத்தை வைத்திருந்ததாகவும்  அது அப்படியே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான், மன்னார்குடியில் உள்ள  பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றினை அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன்  என்பவருடன் இணைந்து பார்ட்னராக நடத்தி வந்ததாகவும், அதில் ஏற்பட்ட பிரச்சினையால் முன் விரோதம் இருந்ததாகவும், அந்த நபர்தான் தன்னை நண்பர்களுடன் வந்து தாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் ஏற்கனவே பாலமுருகன் தெரிவித்த தகவல்கள் நாடகம் என்பது அம்பலமானது. இதனிடையே பாலமுருகன் கொடுத்த புகாரை ஏற்ற மன்னார்குடி போலீஸார், முன்விரோத தகராறில் நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளரை தாக்கிய விவேகானந்தன் மற்றும் ஒரு நபரைத்தேடி வருகின்றனர். மேலும் தன் மீது மிளகாய் பொடி தூவி தன்னைத் தாக்கி 3 லட்சம் கொள்ளை அடித்ததாக காவல்துறையினரிடம் பாலமுருகன் பொய்யான தகவலை கொடுத்ததற்கு காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினர்