தஞ்சாவூர்: 75 ஆண்டுகால மற்றும் 50 ஆண்டு கால கட்சிக்கு இணையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  உருவாகிவிட்டது.  வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும். நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை. உறுதியாக கூறுகிறேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Continues below advertisement

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

75 ஆண்டுகால மற்றும் 50 ஆண்டுகால கட்சிக்கு இணையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்கும் கட்சி ஆட்சி அமைக்கும் இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை வருகின்ற மே மாதம் இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரியும். எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும்  பட்சத்தில் அதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. அரசியல் ஆருடம் கூறும் அளவுக்கு நான் ஞானி கிடையாது.

Continues below advertisement

அ.தி.மு.க ஒன்றிணைப்புக்கான 10 நாட்கள் கெடு முடிந்தது குறித்து  அதற்கான விளக்கத்தை செங்கோட்டையன் அளிப்பார். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது அது அவரது விஷயம் அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது.  கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார்.

அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் செங்கோட்டையன் பேசியும் வந்தார். இதனால், செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில், மனம் திறந்து பேசப் போவதாக அறிவித்த செங்கோட்டையன், கடந்த 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், "அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்.

அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்," என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கெடு விதித்து 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. இதைதான் டிடிவி தினகரனிடம் தஞ்சாவூரில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.