தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் புறவழிச்சாலை திட்டத்தை அவசர, அவசரமாக செயல்படுத்த வேண்டியதற்கு என்ன அவசியம் வந்துள்ளது. விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் செயல்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
போராட்டம்:
தஞ்சாவூர் அருகே கண்டியூரில், திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் தொடர்ந்து 3வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வரும் வயல்களில் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. விவசாயிகளிடம் அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக புறவழிச்சாலையை அமைக்கிறது.
அவசரம் ஏன்:
மாற்றுப் பாதையில் புறவழிச்சாலை அமைக்கலாம். இந்நிலையில், இப்போது செயல்படுத்தப்படும் புறவழிச்சாலை திட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்வதால், பாலமும் கட்ட முடியாது. அப்படி இருக்கும் போது அவசர, அவசரமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதற்கு என்ன அவசியம் வந்துள்ளது.
புறவழிச்சாலை அமையும் பகுதியில் நிலம் வைத்துள்ள விவசாயிகளை அழைத்துப் பேசி, இத்திட்டத்தைச் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கை. அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். அதுவரை இச்சாலை அமைப்பதை நிறுத்த வேண்டும்.
”புறவழிச்சாலை தேவைதான்”
மக்கள் தொகை பெருக்கம், சாலையில் நெரிசல் போன்ற காரணங்களால் தஞ்சாவூர் -திருவையாறு புறவழிச்சாலை தேவைதான். இருப்பினும் அரசு கவனமுடன் கையாள வேண்டும். மேலும், விவசாயிகள், இப்பகுதி மக்களின் ஆதரவுடன் உரிய இழப்பீடு வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30ம் தேதி விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இதையடுத்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புறவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது . இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவு எட்டப்படாததால் தோல்வி அடைந்தது.
கோரிக்கை:
இந்த நிலையில் மீண்டும் விவசாயிகள் தங்களது உண்ணாவிரத தொடர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். தஞ்சை அடுத்த காட்டுக்கோட்டை பாதை பகுதியில் தொடங்கிய போராட்டம் 2-வது நாளாகவும் நீடித்தது. புறவழிச்சாலையை கைவிட வேண்டும். மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும். புறவழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் தங்கள் கோரிக்கையாக வலியுறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.