தஞ்சாவூர்: அதிமுகவில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கை, சுயநலத்தை புரிந்து கொண்டு இதற்கு தக்க முடிவு எடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் 2026 பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி..தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
கஞ்சா மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம்
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதற்கு கஞ்சா மற்றும் போதை பொருள் கலாச்சாரம் தான் முக்கிய காரணம். பட்டித் தொட்டியெல்லாம் மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது. இதை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. வருங்கால சமுதாயத்தின் குரல்வளையை நெறிப்பது போன்றது இந்த செயல். முதலமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக உருவாக்க முடியும்
விஜய் கட்சி ஆரம்பித்து, கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். யார் கட்சி ஆரம்பித்தாலும் பயமில்லை. இன்னொருத்தர் கட்சி ஆரம்பித்ததை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். யார் தேவை. யார் தேவை இல்லை என்று தீர்மானிப்பார்கள்.
பதவிக்காக திமுக எதுவும் செய்யும்
ஆளுநரை இப்போது திமுக எதிர்க்காமல் உள்ளதற்கு, மௌனத்திற்கு காரணம் குறித்து முதல்வரிடம்தான் கேட்க வேண்டும். மத்திய அரசை கண்டு திமுக பயப்படுவதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும். வாஜ்பாய் ஆட்சியின் போது அங்கு கூட்டணியில் இருந்து விட்டு 2004ல் டவுன் பஸ்சில் இருந்து இறங்கி அடுத்த டவுன் பஸ்சில் ஏறுவது போல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று விட்டார்கள். எதையும் செய்யும் கட்சிதான் திமுக. திமுக தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள எது வேண்டும் என்றாலும் செய்வார்கள். அதைக் கேட்டால் ராஜதந்திரம் என்று கூறுவார்கள். நாணயம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு மாநில அரசு கேட்டுக் கொண்டதன் பேரில்தான் மத்தி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மீண்டும் மோடி அரசு வந்தபின்னர் மிகவும் பயப்படுகின்றனர். மடியில் கனம் இருப்பதால் பயம் அதிகமாக இருக்கு.
பழனிசாமி தடையாக இருக்கும் வரை முயற்சி பலிக்காது
அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்து கொள்வது இயற்கை. அந்த வகையில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கெல்லாம் பழனிசாமி தடையாக இருக்கும் வரை இந்த முயற்சி பலிக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான சிறந்த கூட்டணியாக உள்ளது. மக்கள் விரோத திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கும். உறுதியாக அதில் வெற்றி பெறுவோம்.
2026ல் அம்மாவின் கட்சி என்னவாகும்?
2017 பழனிச்சாமி என்கிற சுயநலவாதி, துரோக சிந்தனை கொண்ட நபர் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வந்துவிட்டார். அவரை முதல்வராக்கியது தவறு என்பதால் நாங்கள் பிரிந்து வந்து விட்டடோம். அதிமுகவில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். பழனிசாமியின் தவறான நடவடிக்கையை புரிந்து கொண்டு, சுயநலத்தை புரிந்து கொண்டு இதற்கு தக்க முடிவுக்கட்டுவார்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் 2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
அரசியல் ரீதியாக திமுகவிடம் இணக்கம் காட்டவில்லை
பிஜேபி அரசியல் ரீதியாக திமுகவிடம் இணக்கம் காட்டவில்லை. மத்திய அரசிடம் போய் திமுக தாஜா செய்து குனிந்து, வளைந்து நிற்பதால் அவர்கள் வருகிறார்கள். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அமமுக யாரை நம்பியும் தொடங்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.