தஞ்சாவூர்: தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 83 வயது முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த முதியவர் சிறந்த உடல் நலனுடன் உள்ளார். 


இதய தமனிகளில் / நாளங்களில் கண்டறியப்படும் அடைப்புகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி வழியாக வழக்கமாக ஸ்டெண்ட் பொருத்துதல் செய்யப்படுவது பொதுவானதாக உள்ளது. இதய வால்வுகளிலுள்ள அடைப்புகளுக்கு இது தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 83 வயதான முதியவர் ஒருவருக்கு இதயவால்வில் இருந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி–TAVI சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 


இதய தமனிகளில் உருவாகியிருக்கும் அடைப்புகளுக்கு சிகிச்சையளிக்க ஸ்டெண்ட் பொருத்துதல் பொதுவாக பயன்படுத்தும் ஒரு செயல்உத்தியாகும். இதயவால்வில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்கு இதே செயல்உத்தியை இம்மருத்துவமனை டெல்டா பிராந்தியத்தில் பயன்படுத்தியிருப்பது, ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். 


மிகக்குறைவான ஊடுருவல் கொண்ட இந்த செயல்முறையின் மூலம் சிறப்பான சிகிச்சை பலனை டெல்டா பகுதியில் ராமநாதன் (83) என்ற முதியவர் பெற்றுள்ளார். இந்த சிகிச்சையை பெறும் 3வது நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடுமையான இதயவால்வு அடைப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்தகைய நிலைக்கு வால்வு மாற்று அறுவை சிகிச்சை வழக்கமான சிகிச்சை முறையாக உள்ளது. இருப்பினும் முதியவர் ராமநாதனின் வயதை கருத்தில் கொண்டு TAVI பொருத்தும் செயல்முறையை மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தேர்வு செய்தனர். 


தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறையின் முதுநிலை சிறப்பு நிபுணரான டாக்டர் கேசவமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த தனிச்சிறப்பு வாய்ந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்து சாதித்துள்ளது.  குறிப்பாக இதய செயல்பாட்டை நிறுத்துவதற்கான அவசியமோ அல்லது செயற்கை சுவாச சாதனத்தோடு நோயாளியை இணைப்பதற்கோ அவசியம் இருக்கவில்லை. முழு செயல்முறையும் பொது மயக்க மருந்து பயன்பாடின்றி செய்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த மருத்துவ செயல்முறை நிறைவடைந்த 2 மணிநேரத்திற்குள் முதியவர் ராமநாதன் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். 


இச்செயல்முறையின் சிறப்பான பலன்கள் குறித்து டாக்டர் கேசவமூர்த்தி தெரிவித்ததாவது: இதயவால்வு பிரச்சினைகள் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களுள் ஏறக்குறைய 1 விழுக்காடு நபர்களை பாதிக்கக்கூடும்.  ஒரு ஆரோக்கியமான வயது வந்த நபரில், ஒரு ஆண்டில் இதயவால்வு, சுமார் 3.5 கோடி தடவைகள் திறக்கிறது மற்றும் மூடுகிறது. எனினும் முதியவர்களுக்கு இது சுமார் 300 கோடி தடவைகளாக மாறுகிறது. வால்வுகள் பலவீனமடைந்து அதன் பிறப்புகள் குறுகலாவதால் அடைப்புகள் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கிறது. இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை இத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சையாக இருந்து வருகிறது, ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற TAVI பயன்பாடு அதன் குறைந்த ஊடுருவும் தன்மை மற்றும் விரைவான மீட்பு நேரம் காரணமாக பிரபலமடைந்து வருகிறது. "இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், இந்த புதுமையான செயல்முறையுடன் தொடர்புடைய அபாயங்கள் கணிசமாகக் குறைவு. மூத்த குடிமக்களுக்கு இதய வால்வுகளில் உள்ள அடைப்புகளை அகற்ற TAVI ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது வால்வு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நல்ல மாற்றாகவும், மூத்த குடிமக்களுக்கு மிகவும் சௌகரியமாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பின்னர் சிகிச்சை பெற்று நலம் பெற்ற முதியவர் ராமநாதனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இருதய சிகிச்சை பிரிவு டாக்டர்கள் சீனிவாசன்,  சபரிகிருஷ்ணன், மருத்துவ துணை கண்கானிப்பாளர் டாக்டர் பிரவீன், பொது மோலாளர் டாக்டர் பாலமுருகன், மார்க்கெட்டிங் துறை பொதுமேலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.