மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உலகப் புகழ் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக ஸ்ரீஅபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய திருவிளையாடல் உள்ளிட்ட பல்வேறு தல பெருமைகளை உடைய  இவ்வாலயத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டார்.




இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற திருக்கடையூர் கோயிலுக்கு இன்று காலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அவரது மனைவி  அனுராதாவுடன் வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 




தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் உக்கிர ரத சாந்தி ஹோமம் மற்றும் பூஜைகள் செய்தார். தொடர்ந்து அவர் அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரனி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறைந்த அளவிலானோர் மட்டும் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.


சிவாலயங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில், சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கமான விழாவாகும். சங்கபிஷேகம் செய்வதால், தோஷங்கள், பாவங்கள், தீரும் என்பது நம்பிக்கை, அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது. 




மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் சமயக்குரவர்கள் 3 பேரால் பாடல்பெற்ற பழைமையானதாகும். 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது, பின்னர் 1008 சங்குகளில் இருந்த புனித நீர் மற்றும் கும்பத்தில் இருந்த நீர் இவற்றைக்கொண்டு  சிவாச்சாரியார்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்றது.  திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.