தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே மயிலாடுதுறை வழியாக ரயில் பாதையில் 1877 ஆம் ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விருதாச்சலம் வழியான குறுக்கு ரயில் பாதை அமைக்கும் வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து ஒரே இணைப்பாக இருந்ததால் இந்த பாதையை மெயின் லயன் என்று அழைக்கின்றனர். இப்பாதையில் விழுப்புரம்-புதுச்சேரி, கடலூர்-விருதாச்சலம், மயிலாடுதுறை- காரைக்குடி போன்ற கிளை ரயில் பாதைகள் உள்ளன. மேலும் காரைக்கால், மன்னார்குடி துணை பாதைகளில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்ல மெயின் லயன் பாதை தான் இணைப்பாக செயல்படுகிறது.
193 கி.மீ நீளமுள்ள மெயின் லயன் ரயில் பாதையில் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் டிக்கெட் வருமானம் ஆண்டு ஒன்றிற்கு 20 கோடியை தாண்டியுள்ளதால், இந்நிலையங்கள் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இவ்வகையான பிற ரயில் நிலையங்கள் கோட்ட தலைமையகம் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் யூனியன் பிரதேச தலைநகரான புதுச்சேரி ஆகியவை மட்டுமே.
திருச்சி ரயில்வே கோட்டத்தில், அதிக பட்சமாக 12 சாதாரண பாசஞ்சர் ரயில்களும், 5 டெமு (DEMU) வகை ரயில்களும் தஞ்சை-விழுப்புரம் இடையேயான மெயின் லயன் ரயில் பாதை மற்றும் அதை சார்ந்த கிளை பாதைகளில் தான் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பெரும்பான்மையானவை அவை இயங்கும் மார்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல கூடியவையாகும். இதனால் பயணிகள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது விழுப்புரம்-மயிலாடுதுறை-திருவாரூர், தஞ்சாவூர்-காரைக்கால், நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி ஆகிய தடங்கள் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்தாண்டு நவம்பர் 14ம் தேதி முதல் மின்சார இன்ஜின் கொண்டு ரயில் வண்டிகள் இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி மற்றும் கடலூர்-விருதாச்சலம் ஆகிய ரயில் தடங்களில் விரைவில் மின்மய பணிகள் நிறைவடையும் என்று தெரிகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் (திருவாரூர்-காரைக்குடி நீங்கலாக) முழுவதுமாக மின்மயமாக்கும் பணிகள் நிறைவேற்றபட்டு இப்பகுதி முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார இன்ஜின் கொண்டு ரயிலைகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
ரயில்வே துறையின் புதிய கோட்பாட்டின்படி மின்மயமாக்கப்பட்ட தடங்களில் டீசல் இன்ஜின் கொண்டு ரயில்கள் இயக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இதனால் பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் மின்சார ரயில் பெட்டி யூனிட்களாக மாற்றப்பட சாத்தியம் உள்ளது. இவை மெயின் லயன் எலக்ட்ரில் மல்டிபிள் யூனிட் (மெமு-MEMU) என்று அழைக்கப்படும். இம்மாதிரியான ரயில்கள் தென்னக ரயில்வேகுட்பட்ட பகுதியில் திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் மற்றும் சென்னை ரயில்வே கோட்டங்களில் தற்போது இயக்கப்பட்டுவருகிறது. அவ்வாறான மெமு ரயில்களை பராமரிக்க பணிமனை ஒன்றினை திருச்சி கோட்டத்தின் மைய பகுதியில் ரயில்வே நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கடலூர் முதல் தஞ்சாவூர் வரை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வாலிடமும், முன்னதாக எம்பிக்கள் ராமலிங்கம் மற்றும் சண்முகம், மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் மெயின் லயன் பாதையில் மெமு பராமரிப்பு முனையம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தற்போது திருச்சி பொன்மலை ரயில் நிலைய பகுதியில் மெமு ரயில்களை பராமரிக்க பணிமனை ஒன்றினை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும். அந்த அறிக்கை ஒப்புதல் வேண்டி விரைவில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் திரு மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் மெமு ஷெட் அமைவதால், மயிலாடுதுறை-திருச்சி, மயிலாடுதுறை-விழுப்புரம்-காட்பாடி, தஞ்சாவூர்-காரைக்கால், திருச்சி-விருதாச்சலம்-, திருச்சி-திண்டுக்கல், திருச்சி-கரூர்/ஈரோடு/ சேலம் ஆகிய ரயில் பிரிவுகளில் தற்போது சாதாரண பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் வண்டிகளும், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட டெமு (DEMU) வகை ரயில் வண்டிகளும் படிப்படியாக மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டிகளாக (மெமு ரயில்கள்) இயக்கப்படும். அவற்றை தகுந்த பெட்டி பரிவர்த்தனை முறை மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள மெமு பணிமனையில் பராமரிப்பு பணிகளை செய்யலாம். இதன் மூலம் மெயின் லயன் பகுதியில் சில கூடுதல் ரயில்களை இயக்க முடியும். மெமு ரயில்கள் சாதாரண ரயில்களை விட விரைவாக இயங்கும் என்பதால் பயண நேரமும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பயணிகள் நலன் கருதி திருச்சி ரயில்வே கோட்டத்தில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டி (மெமு) பராமரிப்பு முனையம் ஏற்படுத்த கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ள திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால், முதுநிலை கோட்ட இயக்குதல் மேலாளர் ஹரிகுமார் மற்றும் அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில் பயணிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் செயலாளர் கிரி, சங்க நிர்வாகிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.