தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்காடு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில், சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சாலை அமைக்காததால்,  கடந்த 25 ஆண்டு காலமாக, அப்பகுதியை சுற்றி கொண்டு, குண்டும் குழியுமான சாலையில்  அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் தினந்தோறும் நகரப்பகுதிக்கு செல்லும் போது, கிராமத்தை சுற்றி செல்ல வேண்டியிருப்பதால், அவசரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார்கள், பிரசவத்திற்காக செல்லும் போதும், முதியவர்கள் சிகச்சைாக செல்லும் போதும், சுற்றி செல்ல வேண்டியிருப்பதால், அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது.




ஆக்கிரமித்துள்ள சாலை பகுதியை மீட்டு, சாலை அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம்காட்டி வருகின்றனர்.  மேலும், கடந்த சில மாதங்களாக, அப்பகுதிக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் பல கிலோ மீட்டர் துாரம் சென்று குடிநீர் மற்றும் மற்ற பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுக்க வேண்டியிருப்பதால், அன்றாடம் நடைபெறும் பணிகள் பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், பொன்காடு ஆதிதிராவிடர் தெரு மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையான செயலாகும்.


கடந்த தேர்தலின் போது, இப்பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவோம் என வாக்கு கேட்டு சென்றனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு, இப்பகுதியினர் கேட்ட வசதிகளை செய்து தர வில்லை. எங்களை கண்டு கொள்ளவில்லை. எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலையை மீட்டு, சாலை அமைத்து தர வேண்டும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என்பதை  வலியுறுத்தி, 30 பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆவணம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, தகவல்  அறிந்து அங்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், பேரூராட்சி தலைமை எழுத்தர் அருள்மொழி, துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.




இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலர்கள், காவல்துறையினர், பொன்-காடு ஆதிதிராவிடர் தெருவிற்கு சென்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் எங்களது கோரிக்கையை ஏற்காமல் அலட்சியம் காட்டி வந்ததால், ஆத்திரமடைந்த பொன்காடு மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளதால், நாங்கள் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். அதிகாரிகள் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், பணிகள் முடித்து தரும் வரை, கிராமக்கள் அனைவரும் மீண்டும் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.