தஞ்சாவூர்: எப்படி இருந்த நான் இப்ப இப்படி ஆயிட்டேன் என்பது போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை போல் ஜிவ்வென்று எகிறிக் கொண்டே இருந்த தக்காளி இப்போது கிலோ ரூ.20க்கு விற்பனையாகி வருகிறது. அப்போது ரூ.200ஐ தொட்டு கெத்து காட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தஞ்சையில் வீதி, வீதியாக லோடு வேன் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டதுடன். ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையானது. அட ஆமாங்க. தங்கத்திற்கு ஈடாக விலையேறிக் கொண்டே இருந்த தக்காளி விலை இப்போ தாறுமாறாக சரிந்துவிட்டது.


அன்றாட சமையலில் தவிர்க்கவே முடியாத சில பொருட்களில் தக்காளியும் ஒன்று. பிரியாணி தொடங்கி சட்னி, சாம்பார், ரசம் வரை தக்காளிக்கு என்று தனியிடம் இருக்கும். அதுமட்டுமா அனைத்து அசைவ, சைவ உணவுகளில் கூடுதல் சுவை சேர்ப்பது தக்காளி தான். இத்தகைய தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கும், சரும அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. 




வைட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, நியாசின் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளன. அஜீரணம் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு இது சிறந்த நிவாரணமாகும். தேனும், ஏலக்காய்த் தூளும் கலந்து பருகினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். மாலைக்கண், கிட்டப்பார்வை கோளாறு ஆகியவற்றை தடுக்க தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ சத்து உதவுகிறது.


தினமும் காலையில் ஒரு தக்காளி சாப்பிட்டுவர சிறுநீர்ப் பாதையில் கல் தோன்றாதவாறு தடுக்கலாம். தக்காளி சிறுநீரில் உள்ள அமிலம் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்று நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஒரு கப் தக்காளி சாற்றில் சிறிதளவு உப்பும், சிறிதளவு மிளகுத்தூளும் கலந்து பருகினால் மஞ்சள் காமாலைக்கு நல்லது. ஒரு டம்ளர் தக்காளி சாற்றுடன் தேனும் ஒரு சிட்டிகை ஏல பொடியும் கலந்து பருக வேண்டும். நுரையீரல் கோளாறுகளில் நிவாரணம் பெற இது உதவும். இத்தகைய மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ள தக்காளி ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கிய இடம் பிடிக்கிறது.


இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் இதைவிட அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி சமையலில் முக்கிய இடம் வகிப்பதால் எப்போதுமே மக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்வது வழக்கம். 


ஆனால் விலையேற்றம் காரணமாக அரை கிலோ, கால் கிலோ அளவுக்கு தான் தக்காளியை வாங்கி சென்றனர். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி மற்றும் காய்கறிகள் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலையும் படிப்படியாக சரிந்து வருகிறது.


தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனையானது. தக்காளி விலை குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். அதேபோல் மொத்த வியாபாரிகள் சிலர், பொள்ளாச்சியில் இருந்து மொத்தமாக தக்காளியை வாங்கி வந்து, லோடு வேன் மூலமாக வீதி, வீதியாகவும் சென்று தக்காளியை விற்பனை செய்தனர். தஞ்சை மேலவீதி, தெற்குவீதி உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் தக்காளியை வைத்து கொண்டு  கூவி, கூவி விற்பனை செய்தனர்.


ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் வந்து தக்காளியை வாங்கி சென்றனர். இப்படி வாங்கி சென்ற பொதுமக்களில் சிலர் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பதுபோல் விலை கிடுகிடுவென்று குறைந்து தக்காளி இப்போ ரூ.20க்கு வந்திடுச்சு என்று தெரிவித்தனர்.