திருவாரூர் அருகே உள்ள வில்வனம் படுகை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் திருவாரூர் மின்சார வாரியத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. கண்ணன் கடந்த 15 வருடங்களாக யோகா பயின்று வருகிறார். இவரது மனைவி கடந்த 10 வருடங்களாக யோகா பயின்று வருகிறார். இந்த யோகா குடும்பத்தினர் பல வருடங்களாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த குடிசை வீடு முழுவதும் தங்களது குழந்தைகள் வாங்கிய பதக்கங்கள் மற்றும் கோப்பைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது என்பது பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கிறது. 

 

இவர்களது மூத்த மகள் தர்ஷினி இவர் ஜி ஆர் எம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் தர்ஷினி. இவரும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவர்களது மகன் ரித்தீஷ் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த குழந்தைகள் மூன்று பேரும் சிறுவயதிலிருந்து யோகா பயின்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சகோதரிகள் பல்வேறு யோகா போட்டிகளில் பங்கு பெற்று நூற்றுக்கணக்கான பதக்கங்களையும் கோப்பைகளையும் பெற்றுள்ளனர். சீனாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் தங்கப்பதக்கம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் ஆக்ரா சட்டீஸ்கர் ஆகியவற்றில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். 



 

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2 முதல் 4 வரை பெங்களூர் விவேகானந்தா யோகா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை யோகா போட்டியில் 29 நாடுகள் 200 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தர்ஷினி 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தங்க பதக்கமும் ஹரிணி 15 வயதிற்கு உட்பட்போர் பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

 

மேலும் இந்த போட்டியில் இந்த யோகா சகோதரிகளின் திறமையை பார்த்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்தியாவின் சிறந்த பெண் யோகா பயிற்சியாளரான மந்திப் கௌசந்து என்பவர் இவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் அளவிற்கு சிறந்த முறையில் மும்பையில் பயிற்சி தருவதற்காக அழைத்துள்ளார். இதற்காக வருகின்ற கோடை விடுமுறையில் மும்பைக்கு இந்த சகோதரிகள் பயிற்சிக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



 

இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளை அழைத்து வெகுவாக பாராட்டியது.அதே நாளில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அந்த பள்ளிக்கு  நேரில் வந்து மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் சகோதரிகளை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதேபோன்று பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த யோகா சகோதரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

மத்திய, மாநில அரசுகள் யோகாவிற்கு சிறப்பான முக்கியத்துவம் அளித்து வருகின்றன.இந்த நிலையில் திருவாரூர் போன்ற பின் தங்கிய மாவட்டத்தில் இருந்து ஏழை எளிய குடும்ப பின்னணியில் இருந்து யோகா பயின்று  யோகா மேட் வாங்குவதற்கு கூட சிரமப்படும் சூழ்நிலையில் யோகா பயிற்சி எடுத்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை குவிக்கும் இந்த சகோதரிகளுக்கு அரசு முன்வந்து ஒலிம்பிக்கில் யோகாவை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் அதில் பங்கு பெற்று இந்த சகோதரிகள் இந்தியாவிற்காக பதக்கத்தை வெல்லும் அளவிற்கு உரிய பயிற்சியினையும் நிதி உதவியும் அரசு அளிக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் உள்ளது.