திருவாரூரில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முடக்கும் நோக்கோடு தமிழக அரசு செயல்படுவதை கண்டித்து திமுக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொது உடமை கொள்கைக்கு எதிராகவும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் நுகர் பொருள் வாணிபக் கழகத்தை முடக்கும் நோக்கோடு கூட்டுறவு  துறையிலிருந்து மண்டல மேலாளர் நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்வதை கைவிட வேண்டும், நவீன அரிசி ஆலைகளின் மூன்றாண்டு பராமரிப்புகளை செய்யாமலும் தேவையான நிதி ஒதுக்கீடு வழங்காமலும் இலக்கினை எட்டவில்லை எனவும் ஆலைகள் நட்டத்தில் இயங்குகிறது என தெரிவித்தும் அதனை தனியாருக்கும் தாரை வார்க்கும் நிர்வாகத்தின் முயற்சிகளை கைவிட வேண்டும். 




நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிர்வாக காரணங்களால் நெல் மூட்டைகளை தாமதமாக இயக்கம் செய்துவிட்டு அதனால் ஏற்பட்ட எடை இழப்பிற்கு உரிய இழப்பீடு எதுவும் வழங்காது மொத்த இழப்பீட்டு தொகையையும் பருவ கால தொழிலாளர்கள் மீது மொத்தமாக திணிக்கும் போக்க நிர்வாகம் கைவிட வேண்டும், பல ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர் பணி நியமனத்தை நிறுத்திவிட்டு வேலை செய்ய ஆள் இல்லை என தெரிவித்து வெளி ஆட்களை டெண்டர் முறையில் சுமை தூக்குவோராக பணியமர்த்தும் நிர்வாக சீர்கேடுகளை கைவிட வேண்டும் என்றும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டம் என்பது திமுகவை சார்ந்த  நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்களின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (எல்.பி.எப்) சார்பில் நடைபெற்றது. திமுகவின் தொழிற்சங்கம் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். 




ஏற்கனவே தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒருபோதும் தனியார் மையமாக்கப்படாது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுகவின் தொழிற்சங்கமான எல்பிஎப் தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியாருக்கு தாரைவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆகவே தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும். மேலும் நுகர் பொருள் வாணிபக் கழகத்தை ஒருபோதும் தனியாருக்கு அனுமதிக்க மாட்டோம் அப்படி அரசு தனியாருக்கு அனுமதித்தால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.