மன்னார்குடி புத்தகத் திருவிழாவில் ரூ.24 லட்சத்துக்கு புத்தகம் விற்பனையாகியுள்ளது. 10500 பேர் புத்தக கண்காட்சியில் பங்கேற்றன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் ரூ.24 லட்சத்துக்கு புத்தகம் விற்பனை நடைபெற்றுள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மன்னார்குடியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2வது புத்தகத் திருவிழா, தேசிய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 18ம் தேதி தொடங்கி 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழா அரங்கில் 43 அரங்கங்கள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்து தமிழ் திசை, விகடன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் நேரடியாக பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நேரில் அழைத்து வரப்பட்டு கண்காட்சியை பார்வையிட செய்யப்பட்டு வருகின்றனர். பள்ளி வேலை நாட்களில் சுமார் 3000 மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அழைத்து வரப்படுகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 15 சதவீத தள்ளுபடி, வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கி சலுகை விலையில் புத்தக விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் புத்தகத் திருவிழாவில் சுமார் ரூ.24 லட்சத்துக்கு புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. இது வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழா நடைபெறும் தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர் உரைவீச்சு நடைபெற்று வருகிறது. இதனையும் கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, “வாசிப்பு பழக்கம் மட்டும்தான் மனிதனை மேம்படுத்தும். திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற இந்த குறட்பாவில், துணைக் காலை பயன்படுத்தாமல் எழுதியுள்ளார். இதற்கு அடிப்படை காரணம் கல்வி கற்க வேண்டும் அதற்கேற்ப நிற்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். கல்வி கற்றவனுக்கு எந்த ஒரு துணையும் தேவையில்லை என்பதை உணர்த்தவே அவர் துணைக்கால் பயன்படுத்தாமல் இந்த திருக்குறளை எழுதியுள்ளார். எனவே வாசிப்பு பழக்கம் உள்ள மனிதர்கள் தான் வெற்றி அடைகிறார்கள் என்ற சூசகத்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்” என்றார்.
அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் பேசுகையில், “வாசிப்பு பழக்கம் சுருங்கி கொண்டே வருகிறது. ஐந்தாயிரம் பக்கங்களில் இருந்த இலக்கியங்கள், இதிகாசங்களை சுருக்கி புதினங்களாகவும், நாவல்களாகவும் மாற்றப்பட்டன. அதன் பின்னர் அது சிறுகதை ஆனது. தற்போது ஒரு நிமிட கதை என சுருக்கி விட்டார்கள். இது வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதை காட்டுகிறது. மனிதர்கள் நலமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்றால், உடலையும் உள்ளத்தையும் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்கின்றோம். மனதை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் புத்தக வாசிப்பு ஒன்று தான் துணை நிற்கும். புத்தகம் வாசிக்க வாசிக்க எதையும் தாங்கிக் கொள்கின்ற மனப்பக்குவமும் வலிமையும் கிடைக்கும். கண்ணாடிக்கும் வைரத்துக்கும் இரண்டு வித்தியாசங்கள் தான் உள்ளன. கண்ணாடி உடைத்தால் உடைந்து போகும். வைரத்தை உடைக்க முடியாது அந்த வகையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் கண்ணாடியாக இருக்கப் போகிறீர்களா? வைரங்களாக இருக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.