வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மணலி, ஆலத்தம்பாடி, பாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததன் காரணத்தினால் மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.


மேலும் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் விவசாயிகள் விளைநிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்பிறகு தற்போது சம்பா நெற்பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணிகளில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுக்கிரவாரகட்டளை என்கிற கிராமத்தில் தற்போது சம்பா விதைப்பு செய்து அதற்கான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.




இந்த நிலையில் தற்போது விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக உரிய நேரத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் ட்ரோன்களை கொண்டு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆட்களை வைத்து மருந்து தெளிக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு ரூ.700 முதல் 800 வரை செலவாகிறது என்றும் அதேசமயம் குறைந்த நேரத்தில் பணியை செய்ய முடிகிறது எனவும்  இந்த ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வரை செலவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் நெல் பயிர்கள் மீண்டும் மூழ்கும் நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.




தொடர்ந்து இந்த மழை பெய்தால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை உருவாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அது மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், ஏற்கனவே குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து இருந்தால் அதனை வடிய வைப்பதற்கான நடவடிக்கை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருவதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.