மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நேற்று முன்தினம் காணாத மலையாக 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியது. வீடுகள், விளைநிலங்கள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் இந்த பாதிப்புகளை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் மெய்யநாதன் நேற்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 




தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று வெள்ள பாதிப்புகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடன் இணைந்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து மின்சார பணி நடைபெறும் இடங்களில் மின் ஊழியர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து எடமணல் துணை மின் நிலையத்தில் அமைச்சர் மெய்ய நாதனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:




“கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்துள்ளது.  அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43 செ.மீ மழை பதிவாகி உள்ளது.  மழை அதிகமாக பெய்த காரணத்தினால் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் உடனடியாக சரி செய்து சீரான மின்விநியோகம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு முகாமிட்டு கடந்த இரண்டு நாட்களாக நிவாரண மீட்புப்பணியில் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.  10 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.  குறிப்பாக எடமணல் துணை மின்நிலையத்தில் மிகஅதிக அளவில் சேதமடைந்துள்ளன.  அதனை சீர்செய்யும் பணி மின்வாரிய ஊழியர்கள் மூலம் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.  2260 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன.  அதில் 1984 மின்மாற்றிகள் சரிசெய்யப்பட்டு, சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது. 370 மின்மாற்றிகள் மிகவும் சேதமடைந்துள்ளன.  அதில் 163 மின்மாற்றிகள் மழைநீரில் சூழ்ந்துள்ளன.  200 மின்கம்பங்கள் உடைந்துள்ளன.  




மின்வாரிய ஊழியர் மற்றும் பணியாளர்கள் மூலம் போர்கால அடிப்படையில் பணியாற்றி 120 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.  மீதமுள்ள 80 மின்மாற்றிகள் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்.  இன்று இரவுக்குள் அனைத்து பகுதிகளிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும்.  திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 354 மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள், மின்கம்பிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மின்வாரிய ஊழியர்கள் துரிதமாகவும், சிறப்பான முறையிலும் தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரிய ஊழியர்கள் மூலம் 3000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 472 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிக்கும் இன்று இரவுக்குள் சீரான மின்விநியோகம் தரப்படும்.  மின்வாரிய ஊழியர்களுக்கு பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்டு பணிகள் செய்து வருகின்றனர்.  மின்வாரிய ஊழியர்கள் மிக கடுமையான உழைப்பை செய்து வருகிறார்கள்.  ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், அரசு இயந்திரமும் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றனர்” என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.




அதனைத் தொடர்ந்து எடமணல் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ”மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செ.மீ. மழை ஒருசில தினங்களுக்கு முன்பு பெய்துள்ளது.  இது வரலாறு காணாத மழையாகும்.  நிறைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.   முதலமைச்சரின் உத்தரவுபடி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் மிகவிரைவாக நடைபெற்று வருகின்றன.  கனமழை பெய்த காரணத்தினால் சீர்காழியில் 10,000 ஹெக்டேர் நெற்பயிற்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.  செம்பனார்கோயிலில் 10,250 ஹெக்டேர் நெற்பயிற்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன என மொத்தம் இதுவரை வந்த கணக்கின்படி 34,852 ஹெக்டேர் நெற்பயிற்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.  15000 -க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சூழ்ந்த மழைநீரை பம்புசெட்டு மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.  




தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை 42 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. வீடு மற்றும்  முகாம்களில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 22,000 நபர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.  நடமாடும் உணவகம் மூலமும் உணவு வழங்கப்படுகிறது. பழையார் பாலம் உடனடியாக சீர்செய்யப்படும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக புத்தகம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என கூறினார்.