திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மணலி பகுதியில் விமலா என்பவர் நியூ அன்னை ஏஜென்சிஸ் என்கிற உரம், தீவனம் அரிசி மற்றும் புண்ணாக்கு போன்றவை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டி ஸ்டேட் பாங்க் வங்கி கிளையில் தனது ஓடி அக்கவுண்டில் தனது கணவர் முருகையனின் சொத்துக்களையும் நிறுவனத்தில் உள்ள பொருட்களையும் ஈடாக வைத்து 10 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி 7370 ரூபாய் எஸ்.பி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலின் போது இவரது நிறுவனத்தில் உள்ள ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. 




இதனை அடுத்து தனக்கு எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விமலா விண்ணப்பித்துள்ளார். அதற்கு எஸ்.பி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிர்வாகம் தாங்கள் பிரீமியம் தொகை செலுத்தவில்லை என்று கூறி இழப்பீடு தொகை வழங்க மறுத்துள்ளது. மேலும் தாங்கள் பிடித்தம் செய்த தொகை என்பது இன்சூரன்ஸ்கான பிரிமியம் தொகை அல்ல என்றும் இந்த தொகை மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் மூலம் கடன் உத்தரவாத ஃபண்டிற்காக செலுத்தப்பட்ட தொகை எனவும் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து விமலா திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார். 




இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு பொய்யான காரணத்தை கூறி இழப்பீடு தொகை வழங்க மறுத்த எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திருத்துறைப்பூண்டி வங்கி கிளை இணைந்தோ அல்லது தனித்தோ புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்காக ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வழக்கு செலவிற்காக  பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புகார்தாரரரின் நியூ அன்னை ஏஜென்சி நிறுவனத்தில் இருந்த பொருட்களுக்கு உரிய கணக்கீடு செய்து இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண